
நன்றி குங்குமம் ஆன்மிகம்
கணேச பஞ்சரத்னம் அரங்கேறிய தலம் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டியில் விநாயகர் சிவப்பு நிறத்தில் அருள்கிறார். ஆதிசங்கரர் இத்தலத்தில்தான் தன் அற்புதமான `கணேச பஞ்சரத்னம்’ எனும் துதியை அரங்கேற்றியருளினார்.
கதவில்லா விநாயகர் கோயில்
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு, அருகிலிருக்கும் நர முக விநாயகர் கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது. இக்கோயிலுக்கு கதவு கிடையாது. பக்தர்கள், இரவு, பகல் என்று எந்நேரமும் இவரை தரிக்கலாம். அவர்களே தீப ஆரத்தி காட்டி, நிவேதனமும் செய்யலாம். இந்தப் பிள்ளையாருக்கு புதுத் துணி சாத்தி ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் கடன்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ராகு – கேது தோஷம் நீக்கும் விநாயகர்
கேதுவிற்கு அதிபதியான விநாயகர் வயிற்றில் ஒட்டியாணம் போல ஒரு பாம்பினைக் கட்டியிருப்பார். அதனாலேயே விநாயகரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இந்த விநாயகப் பெருமானை குமாரலிங்கம் தத்தாத்ரேயர் ஆலயத்திலும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருமழிசை ஜகந்நாதப் பெருமாள் ஆலயத்திலும் தரிசிக்கலாம்.
அதிசய ஆஞ்சநேயர்
வேலூருக்கு அருகே, கல்புதர் ஊரில் சாலையோரம் 5 முகங்கள் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்கிறார். காட்பாடியிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள இந்த இடத்தில் ஐந்து குரங்குகள் இறந்து கிடந்தனவாம். அவற்றை இந்த இடத்தில் புதைத்துள்ளனர். ஒரு பக்தர் கனவில் அனுமன் தோன்ற, பஞ்சமுக அனுமனின் சிலையை அங்கே பிரதிஷ்டை செய்யச் சொன்னாராம். அதன்படி வைக்கப்பட்டதே இந்த அனுமன் சிலை.
பிரமோஷனுக்கு விநாயகர்;
ட்ரான்ஸ்ஃபருக்கு அனுமன்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை – அணைப்பட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமனின் அருகே விநாயகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். பதவி உயர்வு வேண்டுவோர் இங்கு வந்து அறுகம்புல் மாலை சாத்தி விநாயகரை வேண்டிக்கொள்ள அவர்கள் விரும்பிய பதவி உயர்வு கிடைக்கிறது. அதே போல, அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால், விரும்பிய இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கிறது! எனவே இந்த விநாயகரை பிரமோஷன் விநாயகர் என்றும், அனுமனை ட்ரான்ஸ்ஃபர் அனுமன் என்றும் அழைத்து வணங்குகிறார்கள்.
கோடி விநாயகர்
கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூர் கோடி விநாயகர். இங்கு எல்லாமே கோடிதான். அதாவது கோடி விநாயகர், கோடீஸ்வரர், கோடி தீர்த்தம், கோடி விமானம், கோடி கோபுரம் என எல்லாமே கோடியில் இருக்கும். இத்தலத்திற்கு வந்து இந்த விநாயகரை வழிபட்டு பின், மற்ற தெய்வங்களை வழிபட்டால் கோடிச் செல்வங்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.
ஐந்தெழுத்து கணபதி
விநாயகப் பெருமானின் வடிவங்களில் திரையட்சர கணபதி (மூன்றெழுத்து), பஞ்சாட்சர கணபதி, என்ற வடிவங்களைக் காண்கிறோம். இவை மந்திர மூர்த்தம் எனப்படும். விநாயகரின் ஐந்து கரங்களும், திருவைந்தெழுத்தாகிய நமசிவாய எனும் மந்திரத்தை உணர்த்துவதாகவே கூறுவர். அங்குசம் ஏந்திய வலது கை, சிகரம் என்றும், பாசமேந்திய இடது கை வகரம் என்றும், ஒன்றைத் தந்தம் ஏந்திய வலக்கை யகரம் என்றும், மோதகம் ஏந்திய இடக்கை நகரம் என்றும், துதிக்கையின் சுழிந்த நுனி மகரம் என்றும் கொள்ளுவர். இவ்வகையில் ஐந்தெழுத்தும் அவருள் அடங்குகிறது. ‘‘ஓ’’ என்ற பிரணவம் முகமாக விளங்குகிறது. இவ்வாறு ஓம் நமசிவாய எனும் ஆறெழுத்தால் விநாயகர் திருமேனி தாங்கியவராகக் காட்சியளிக்கிறார். இதையொட்டி ஆறெழுத்து கணபதி என்றும் அழைக்கப்படுகிறார்.
தொகுப்பு: அனந்தபத்மநாபன்
The post ஆன்மிகம் பிட்ஸ்: ராகு – கேது தோஷம் நீக்கும் விநாயகர் appeared first on Dinakaran.