×

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த…

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய காலச் சூழலில், வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும் அதிகரித்து வருவதால், நாளுக்கு நாள் மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணம் சீரற்ற ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் உடலில் கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிப்பதும்தான். பொதுவாக செரிமானத்திற்கு உதவுவதற்கும், ஹார்மோன்களை உருவாக்குவதற்கும் கொலஸ்ட்ரால் தேவை.

ஆனால், இது ஒவ்வொருவருக்கும் அவரவர் உடல் அமைப்புக்கு ஏற்றவாறு வேறுபட்டிருக்கும். அதனை சீரான முறையில் பராமரித்து வந்தால், உடலில் எந்த பிரச்னையும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். அந்தவகையில், ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமானால், தினமும் உடற்பயிற்சி செய்வதோடு, ஆரோக்கியமான உணவுகளையும், வாழ்க்கை முறையையும் அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான எளிய வழிகள் சிலவற்றைப் பார்ப்போம்:

கொலஸ்ட்ரால் என்பது பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு அவசியமான எண்ணெய் சார்ந்த கொழுப்புப் பொருளாகும். இவை உடலில் அளவுக்கு அதிகமாகும்போது, ​​​​அது தமனிகளில் அடைப்பு ஏற்படுத்தி மாரடைப்புக்கு வழிவகுப்பதோடு, இதயநோய், பக்கவாதம், நிரிழிவு நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.

கொலஸ்ட்ரால் பிரச்னைக்கு பழங்களும் நல்ல தீர்வைக் காண உதவுகிறது. எனவே, ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் சில பழங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

பப்பாளி : பப்பாளியில் நார்ச்சத்து மட்டுமின்றி பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. இது சோடியத்தால் ஏற்படும் விளைவை நடுநிலையாக்குகிறது. மேலும் இது ரத்தக் குழாய்களில் தேங்கியுள்ள கொலஸ்ட்ராலை நீக்குவதோடு. மாரடைப்பைத் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது. எனவே ரத்த அழுத்தம் மற்றும் கொல்ஸ்ட்ரால் பிரச்னையை கொண்டவர்கள். தினமும் சிறிது பப்பாளியை காலையில் உட்கொண்டு வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

திராட்சை : திராட்சை மிகவும் சுவையான பழம் மட்டுமின்றி, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் அற்புதமான பழமும் கூட. தினமும் சிறிது திராட்சையை உட்கொண்டு வந்தால், அது இதயத்தின் செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ளும். திராட்சையில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகமாக உள்ளன. அவை இதய நோய்களைத் தடுப்பதோடு, புற்றுநோய்களின் அபாயத்தையும் தடுக்கின்றன. மேலும் இது ரத்தம் உறைவதைத் தடுத்து, கொலஸ்ட்ராலால் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளையும் தடுக்கிறது.

வாழைப்பழம் : வாழைப்பழம் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய சத்துமிகுந்த பழம். வாழைப்பழத்தை சாப்பிட்டால் அது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் இருப்பதால் இதை உட்கொள்ளும்போது மாரடைப்பின் அபாயம் குறைக்கிறது. மேலும் இது மன அழுத்த அளவுகளைக் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

அவகோடா : அவகோடா பழம் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தைப் பராமரிக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு அவற்றில் உள்ள பொட்டாசியம், மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், டயட்டரி நார்ச்சத்து போன்றவைதான் காரணம். இவை அனைத்தும் இதயத்தை பாதுகாக்கின்றன.

சிட்ரஸ் பழங்கள் : சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதோடு, இதய நோயின் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது. ஒருவர் தினமும் சிட்ரஸ் பழங்களை தங்களின் உணவில் சேர்த்து வந்தால், அது ரத்தக் குழாய்களில் தேங்கியுள்ள கொலஸ்ட்ராலை கரைத்து , இதயத்தின் செயல்பாட்டை சிறப்பாகவைத்துக் கொள்ள உதவுகிறது.

ஆப்பிள் : தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறுவார்கள். இதற்கு ஆப்பிளில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துதான் காரணம். இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் தினமும் ஆப்பிளை உட்கொண்டு வந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

நெல்லிக்காய் : நெல்லிக்காய் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கணிசமாக குறைத்து. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டி ஆக்ஸிடன்டுகள் ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இதயம் மற்றும் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, சோடியத்தைக் குறைக்க உதவுகிறது.இதைத்தவிர, தினசரி உடற்பயிற்சி, யோகா ஆசனங்கள், பிராணயாமம், தியானம் மற்றும் ஆரோக்கியமான உணவுமுறை ஆகியவையும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. உடலில் எந்த நோயும் வராமல் காக்கிறது.

தொகுப்பு: கவிதா பாலாஜிகணேஷ்

The post கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த… appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,
× RELATED மசாலாக்களின் மறுபக்கம்