மாமல்லபுரம்: தமிழ்நாட்டில் பெண்களுக்கு தாவணி அணிந்து மஞ்சள் நீராட்டு விழா நடத்துவது போல், மாமல்லபுரத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு வேட்டி அணியும் விழா நடத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலுக்கு அருகே உள்ள தொட்டவரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் – ஹரிப்பிரியா தம்பதியரின் ஒரே மகன் வெங்கடவினய் (15). இவர், செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் வந்த வெங்கடேஷ் அங்குள்ள கோவளம் சாலையில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு அலங்கார மேடை அமைக்கும் கடை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் வயதுக்கு வந்த பெண்களுக்கு எப்படி மஞ்சள் நீராட்டு விழா நடத்துகிறார்களோ! அதேபோல், ஆந்திர மாநிலத்திலும் பெண்களை போல் 15 வயதை கடந்த ஆண் பிள்ளைகளுக்கு அவர்களது பெற்றோர் தங்கள் முன்னோர்கள் கடைபிடித்த பாரம்பரிய முறைப்படி வேட்டி அணியும் விழா நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக மாமல்லபுரத்தில் வெங்கடேஷ் – ஹரிப்பிரியா தம்பதியினர் பத்திரிக்கை அடித்து வாழை மரம் உள்ளிட்ட தோரணங்களுடன், பிரம்மாண்ட மேடை அமைத்து ஊரே வியந்து பார்க்கும் வகையில் தங்கள் ஒரே மகனுக்கு வேட்டி திருவிழா நடத்தி அழகு பார்த்தனர்.
தமிழ்நாட்டில் மணமக்களை எப்படி காரில் அழைத்து வரப்படுகிறார்களோ? அதேபோல் 10ம் வகுப்பு படிக்கும் வெங்கட்வினய் ஆந்திராவில் இருந்து வந்த நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மாமல்லபுரம் ஐந்து ரதம் அருகே உள்ள சாய்பாபா கோயிலில் இருந்து செண்டை மேளம் முழங்க, பழங்கால காரில் விழா நடக்கும் அரங்குக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு, ஆந்திர மாநில பெண் நடன கலைஞர்கள் நடனமாடி விழா மேடைக்கு வெங்கட்வினயை அழைத்து சென்றனர். பிறகு, மேடையில் தாய் மாமன் சீர் வரிசை தட்டுடன் கொடுத்த பட்டு வேட்டி, சட்டை அணிந்து கொண்டு மேடைக்கு வந்தார்.
பிறகு, பத்திரிகை வைத்து அழைக்கப்பட்ட நெருங்கிய உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் மேடையின் இரு புறமும் வரிசையாக நின்று சிறுவன் வெங்கட்வினய்க்கு வாழ்த்து தெரிவித்து அன்பளிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி போட்டோ மற்றும் செல்பி எடுத்து கொண்டு போட்டோக்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக, வேட்டி அணியும் விழாவுக்கு வந்த அனைவருக்கும் தமிழ்நாட்டின் பாரம்பரிய சைவ உணவுகள் பரிமாறப்பட்டது.
The post பெண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்துவதுபோல் உறவினர் புடைசூழ ஊர்வலம், சீர்வரிசையுடன் ஆண் மகனுக்கு வேட்டி அணியும் விழா: மாமல்லபுரத்தில் வினோதம் appeared first on Dinakaran.
