×

எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இந்திய மொழிகளில் சட்டங்களை உருவாக்க அரசு முயற்சிக்கிறது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: அனைவருக்கும் புரியும் எளிய முறையிலும், அதிகபட்ச இந்திய மொழிகளிலும் சட்டங்களை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக பிரதமர் மோடி பேசி உள்ளார். டெல்லியில் 2 நாள் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: சைபர் தீவிரவாதம் மற்றும் பண மோசடி போன்ற அழிவுகரமான நோக்கங்களுக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஆபத்து, எல்லைகள், அதிகார வரம்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆபத்து உலகளாவியதாக இருக்கும் போது, அதை எதிர்கொள்ளும் முறையும் உலகளாவியதாக இருக்க வேண்டும். எனவே, செயற்கை நுண்ணறிவு ஆபத்துகளை சமாளிக்க, பாதுகாப்பான விமான பயணத்திற்கு இருப்பது போல, அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் கூடிய உலகளாவிய கட்டமைப்பு அவசியம்.

சட்டங்களை எழுதும் மொழியும், நீதித்துறையில் பயன்படுத்தப்படும் மொழியும், நீதியை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய சட்டங்கள் 2 வழிகளில் தயாரிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். அனைவருக்கும் பழகிய மொழியில் சட்டம் இருக்க வேண்டும். அதோடு, சாமானியனும் புரிந்து கொள்ளும் வகையில் எளிதாக இயற்றப்பட வேண்டும். இதற்கான உறுதியான உண்மையான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. நமது சட்ட அமைப்பு பிறந்தது வளர்ந்தது எல்லாமே சிக்கலான கட்டமைப்பில்தான். அதிலிருந்து வெளிக் கொண்டு வரும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இதில் முதல் அடியை, தகவல் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் எடுத்து வைத்துள்ளோம். இச்சட்டம் எளிய மொழியில் இயற்றப்பட்டுள்ளது. இதில் இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. அதற்கு நிறைய நேரமும் உள்ளது. எனவே தொடர்ந்து அவற்றை செய்வேன். 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டுமென்ற இலக்கை அடைய வலுவான பாரபட்சமற்ற நீதி அமைப்பின் அடித்தளம் அவசியம். இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கை வைப்பதில், பாரபட்சமற்ற நீதி வழங்குவதே பெரும் பங்கு வகிக்கிறது. நீதிமன்றங்களின் சுமையை குறைக்கவும், பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணவும் மத்தியஸ்தம் தொடர்பான சட்டங்களை நாங்கள் இயற்றி உள்ளோம். இதேபோல், லோக் அதாலத்துகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் ஏறக்குறைய 7 லட்சம் வழக்குகள் லோக் அதாலத் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

*நீதித்துறை, அரசுக்கு இடையே ஒத்துழைப்பு
மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசுகையில், ‘‘அரசியலமைப்பு சட்டமானது, நாடாளுமன்றம், நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறைக்கு என அதிகாரங்களை பிரித்து வழங்கி உள்ளது. இதில் ஒவ்வொரு அமைப்பும் மற்ற அமைப்புகளை புரிந்து கொள்ளவும், நீதியை வழங்கவும் வாய்ப்பை வழங்கி உள்ளது. எனவே, இம்மூன்று அமைப்புகள் இடையே ஒத்துழைப்பானது, நீதித்துறை சார்ந்த வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்குவது மட்டுமல்லாமல், நீதிக்கான அணுகலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது’’ என்றார்.

The post எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இந்திய மொழிகளில் சட்டங்களை உருவாக்க அரசு முயற்சிக்கிறது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Govt ,PM Modi ,New Delhi ,Modi ,Union government ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...