×

40+ வயதினருக்கு ஹார்ட் அட்டாக்…

நன்றி குங்குமம் டாக்டர்

தடுக்க… தவிர்க்க!

ஒரு காலத்தில் ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு அறுபது வயதைத் தாண்டியவர்களுக்கு, அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு மட்டுமே அதிகமாக நேர்ந்த ஒரு நோய்க்குறியாக இருந்தது. இன்று அது இளவயதினரைக் கூட தாக்கும் ஒரு கொடிய சிக்கலாக மாறி இருக்கிறது. நம்முடைய நவீன கால சீரழிவு வாழ்க்கைமுறையே இதற்குப் பிரதான காரணம். சமீப காலமாக, 40+ வயதினர் மாரடைப்பால் காலமாவது அதிகரித்திருக்கிறது.

கடந்த இரு வருடங்களில் குறிப்பாக, கொரோனாவுக்குப் பிறகு இந்த வகை இறப்பு விகிதங்கள் இந்தியாவில் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. இதற்கான காரணங்கள் என்னென்ன என்ற ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கிறன. கொரோனாவுக்குப் போட்ட தடுப்பூசிதான் ஒரு காரணம் என்று பரவலாகச் சொல்லப்பட்டாலும் மருத்துவத் தரப்பிலிருந்து இதற்கான பதில் ஏதும் பெற முடியவில்லை. அரசோ, மருத்துவர்களோ, மருத்துவ விஞ்ஞானிகளோ இதற்கான நேரடியான பதிலை இன்னமும் சொல்லவில்லை. ஆனால், நவீன வாழ்க்கை முறை உருவாக்கி இருக்கும் வாழ்வியல் குழப்பங்களை ஒரு பிரதானமான காரணமாக எல்லோருமே சொல்கிறார்கள். அவை என்னவென பார்ப்போம்.

மாரடைப்பு என்றால் என்ன?

நம் உடலின் மற்ற பாகங்களைப் போலவே, இதயமும் நன்றாகச் செயல்படுவதற்கு ஆக்ஸிஜனின் நல்ல சப்ளை தேவைப்படுகிறது. கரோனரி தமனிகள் இந்த தேவையை பூர்த்தி செய்து இதயத்திற்கு ஆக்ஸிஜனை வழங்குகின்றன. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, கரோனரி தமனிகளின் சுவர்களில் கொழுப்பு படிவுகள் அல்லது பிளேக் உருவாகிறது.

இத்தகைய தகடு உருவாக்கம் சரியான வாழ்க்கை முறை மாற்றங்கள் இல்லாமல் காலப்போக்கில் அடைப்புகளாக மாறும். தமனியில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால், இதயத் தசையின் பகுதிகளுக்கு ரத்தம் செல்வதைத் தடுக்கிறது. இது கார்டியாக் இஸ்கெமியாவை ஏற்படுத்துகிறது, இதயத்தின் ஒரு பகுதி ஆக்ஸிஜன் இல்லாமல் இருக்கும் நிலை. கார்டியாக் இஸ்கெமியாவைக் கவனிக்காதபோது அல்லது நீண்ட காலமாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இதய திசுக்கள் இறந்து, மாரடைப்பை ஏற்படுத்துகின்றன. மாரடைப்பு என்றும்
அழைக்கப்படுகிறது.

மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது?

இதயத்தில் உள்ள கரோனரி தமனிகள் சேதமடைந்ததால் மாரடைப்பு ஏற்படுகிறது. கரோனரி தமனிகள் பல காரணங்களால் தடுக்கப்படுகின்றன, மேலும் இது இதயத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. இந்த நிலை கரோனரி தமனி நோய் என்று அழைக்கப்படுகிறது, இது பெரும்பாலான மாரடைப்புகளுக்கு முக்கிய காரணமாகும்.

மற்ற சந்தர்ப்பங்களில், கொலஸ்ட்ரால் மற்றும் பிற பொருட்களை இரத்த ஓட்டத்தில் அனுமதிக்க இதயத்தில் உருவாகும் பிளேக் சிதைந்தால் மாரடைப்பு ஏற்படுகிறது. சிதைவின்போது, ​​இரத்த உறைவு இதயத்திற்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்த விநியோகத்தைத் தடுக்கிறது. அரிதான சந்தர்ப்பங்களில், மாரடைப்பு இரத்த நாளங்களின் பிடிப்பு காரணமாக ஏற்படுகிறது.

அறிகுறிகள்

மாரடைப்பின் அறிகுறிகள் ஒருவருக்கும் மற்றொருவருக்கும் மாறுபடும். அறிகுறிகள் நோயின் தீவிரத்தைப் பொறுத்தது. சில நோயாளிகள் இந்த அறிகுறிகளை தெளிவாக அனுபவிக்கிறார்கள், இது உடனடியாக மருத்துவ உதவியை நாட அனுமதிக்கிறது; இருப்பினும், அவர்களில் சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் திடீரென மாரடைப்பு ஏற்படுகிறது.

நீங்கள் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் இங்கே:

*அழுத்தம் மற்றும் இறுக்கத்தை உள்ளடக்கிய கடுமையான அல்லது லேசான மார்பு வலி . இந்த உணர்வு கைகள், கழுத்து, தாடைகள் மற்றும் பின்புறம் உள்ள
பகுதிகளுக்கு நீட்டிக்கப்படலாம்.

*குமட்டல், நெஞ்செரிச்சல், அஜீரணம் மற்றும் வயிற்றுவலி போன்ற உணர்வு

*குளிர் வியர்வை

*சோர்வு

*திடீர் தலைசுற்றல் மற்றும் தலைச்சுற்றல்

*மூச்சுத் திணறல்

*யாரோ ஒருவர் நம்முடைய மார்புப் பகுதியில் அழுத்துவது போன்று அதிகமான வலி இருக்கும். இதனுடன் அதீத வியர்வை மற்றும் மயக்கம் வரும் அறிகுறிகளும் இருக்கும். அது ஒருவேளை மாரடைப்பாக இருக்கலாம். 20 நிமிடங்களுக்குள் இந்த அறிகுறிகள் நின்றுவிட்டால், அது ‘மைனர் ஹார்ட் அட்டாக்’. 20 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தால் அது ‘சிவியர் ஹார்ட் அட்டாக்’. இதில் எந்த வகையாக இருந்தாலும், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வது அவசியம்.

யாருக்கு மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம்!

பொதுவாக நான்கு வகையினருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீண்ட காலமாக சர்க்கரை, ரத்த அழுத்தம் அல்லது ரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு உள்ளவர்கள் மற்றும் பாதிப்புகள் இருந்தும் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஒரு நாளைக்கு 10 சிகரெட்டுகளுக்கு மேல் புகைப் பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தப் பிரச்னை இருப்பவர்கள் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், கொழுப்பு அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடனடியாகப் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

முதலுதவி

நெஞ்சில் வலி, வியர்வை, மயக்கம் என மாரடைப்புக்கான அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். அப்படி மருத்துவமனைக்குச் செல்லும்போதே, ‘ஆஸ்ப்ரின்’ மாத்திரையை அவருக்குக் கொடுக்க வேண்டும். இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தத்தில் ரத்தத் தட்டுகள் (பிளேட்லெட்) உள்ளன. இவை ஒன்று சேர்ந்து ரத்த உறைதலை ஏற்படுத்தும்.

ஆஸ்ப்ரின் மாத்திரையானது ரத்தத்தட்டுகள் ஒன்றுசேர்ந்து அடைப்பு ஏற்படுத்துவதைத் தவிர்க்கும். ஏற்கெனவே ஏற்பட்ட அடைப்பையும் சரிசெய்ய முயற்சிக்கும். அதனால்தான் அந்த மாத்திரையை மாரடைப்பு வந்தவர்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறோம்.ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், அவருக்கு காற்று செல்ல வழிவிடாமல் கூட்டமாக சுற்றி நிற்கக்கூடாது. மருத்துவமனைக்குச் சென்ற பிறகு, அவருக்கு மருந்து மாத்திரை மூலம் ரத்தம் உறைதலை சரி செய்யலாமா அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்யலாமா என்பதை டாக்டர் முடிவு செய்து சிகிச்சை அளிப்பார்.

ஒருவேளை மருத்துவமனை மிக தொலைவில் உள்ளது. கொண்டுசெல்வதற்குள் மாரடைப்பு வந்தவர் மயங்கிவிட்டார் என்றால், அவருக்கு சில முதல் உதவிகளைச் செய்யலாம். முதலில் அவரைப் படுக்கவைத்து, அவரது நெஞ்சு கூடு ஏறி இறங்குகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அவரது கை அல்லது காலில் நாடித் துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும். நெஞ்சில் காதை வைத்து இதயத் துடிப்பு உள்ளதா என்பதைப் பார்த்து, அவரது வாயோடு வாய் வைத்து காற்றை உள்ளே செலுத்த வேண்டும்.

பின்னர், நோயாளியின் அருகில் அமர்ந்து, இடது மார்புப் பகுதியில் நம்முடைய இரண்டு கைகளின் உள்ளங்கைப் பகுதியை ஒன்றுசேர்த்து அரை செ.மீ. அளவுக்கு மென்மையாக அழுத்த வேண்டும். இந்த வகையில், மூன்று முறை நெஞ்சில் அழுத்த வேண்டும். பிறகு ஒருமுறை வாயோடு வாய் வைத்துக் காற்றை ஊதவேண்டும். இந்த இரண்டையும் மாறிமாறித் தொடர்ந்து செய்ய வேண்டும். நெஞ்சில் அழுத்தும்போது வேகமாக அழுத்தக் கூடாது. அப்படிச் செய்வதால், விலா எலும்பு உடைவதற்கான வாய்ப்பு உள்ளது.

பாதிக்கப்பட்டவருக்கான இந்த முதல் உதவிச் சிகிச்சைகளைச் செய்வதோடு, உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவும் முயற்சிக்க வேண்டும்.நோயாளிக்குச் சர்க்கரைநோய் பாதிப்பு இருந்தால், அவருக்கு சர்க்கரை அல்லது குளுக்கோஸ் கொடுத்து, சாப்பிடச் சொல்ல வேண்டும். மாரடைப்பின்போது இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடுக்கப்படுகிறது. இதனால், ரத்தம் இன்றி இதயத் தசைகள் செயல் இழக்க ஆரம்பிக்கும். எனவே, எவ்வளவு சீக்கிரம் மாரடைப்பு வந்தவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளிக்கிறோமோ… அந்த அளவுக்கு அவரது இதயத் தசைகளைக் காப்பாற்ற முடியும்.

மாரடைப்பு தடுக்க தவிர்க்க!

உறக்கம் எனும் பேட்டரி சார்ஜ் அவசியம்

நவீன வாழ்க்கை முறையே மாரடைப்பு ஏற்படுவதற்கான பிரதான காரணம். இன்றை டெக் உலகத்தில் இரவு என்பது நீண்டதாகிவிட்டது. கையில் உள்ள செல்போனில் பேட்டரி தீரும் வரை அதை நோண்டிக்கொண்டிருப்பது என்பது அன்றாடமாகிவிட்டது. இதனால் இரவில் நேரமே உறங்கச் செல்லும் வழக்கம் போயே போச்சு. ஆரோக்கியமான உடலுக்கு எட்டு மணி நேர உறக்கம், அதிலும் இரவுநேர உறக்கம் மிகவும் முக்கியம்.

அடர்ந்த இரவில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் மூளையில் சுரக்கிறது. இதுவே நம்மை பகலில் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இயங்க வைக்கிறது. இரவில் கண் விழிக்கும்போது இந்த ஹார்மோன் சுரப்பு தடைப்பட்டு, டிப்ரசன் உருவாகி உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன. இது மாரடைப்புக்கு வழிவகுக்கிறது. எனவே, இரவில் நேரமே உறங்கச் செல்வது மிகவும் முக்கியம்.

உணவு

ஆரோக்கியமான உணவுப்பழக்கம் காற்றோடு போய்விட்டது. வெள்ளை வெளேர் என்று இருக்கும் பாலிஷ்டு அரிசிதான் மிகவும் நல்லது என்ற மோகம் எப்படியோ நம்மிடையே வந்துவிட்டது. இதனால் நார்ச்சத்துக்கள் நீங்கிய ஒரு கார்போ குவியலை உடலுக்குள் அனுப்புகிறோம்.

இது செரிமானத்தை பலவீனப்படுத்துகிறது. மேலும், ஜங்க் புட், ஃபாஸ்ட் ஃபுட் என்ற பெயர்களில் செயற்கைச் சுவையூட்டிகள், நிறமூட்டிகள் நிறைந்த பாஸ்தா, நூடுல்ஸ், பீஸா, பர்க்கர், மோமோ போன்றவற்றை உண்பது, கார்ப்பனேட்டட் பானங்களை ஃபேஷன் என்ற பெயரில் பருகுவது, காப்பசீனோ, காப்பியானா என்று விதவிதமான காபிகளை உணவு நேரத்தில் பருகுவது என நம் உணவுப் பழக்கத்தை கொடூரமாக மாற்றி வைத்திருக்கிறோம். சிறுதானியங்கள், கூழ், பழச்சாறுகள், நட்ஸ், காய்கறிகள் போன்ற ஹெல்த்தியான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. இது உடலை வலுவாக்கும்.

உடற்பயிற்சி

நவீன கருவிகள் நம்மை உடல் உழைப்பே இல்லாதவர்களாக மாற்றிவிட்டது. ஒரு மனிதன் சராசரியாக தினமும் பத்தாயிரம் அடிகள் அல்லது ஒரு மணி நேரம் நடக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்து நடப்பது, ஜாகிங், ரன்னிங், சைக்கிளிங், ஜம்பிங், ஸ்கிப்பிங் போன்ற கார்டியோ வொர்க் அவுட்கள் செய்வது இதயத்தை வலுவாக்கும். ஜிம்மில் சென்று வொர்க் அவுட் செய்வதும் நல்ல பலனைத் தரும்.

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

The post 40+ வயதினருக்கு ஹார்ட் அட்டாக்… appeared first on Dinakaran.

Tags : Saffron ,Dinakaran ,
× RELATED தூங்கானை மாடம்