×

சரணடைந்தோரை தேற்றும் நாமம்

அருட்சக்தி பெருக்கும் ஆன்மிகத் தொடர் 16

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் பிரம்மாண்ட மண்டலா லலிதா சஹஸ்ரநாமத்தின் ஒவ்வொரு நாமமும் இதற்கு முந்தைய நாமத்தோடு தொடர்பு கொண்டது. ஒவ்வொரு ஐந்து நாமங்களும் அல்லது பத்து நாமங்களும் அம்பிகையின் பிரபாவத்தையும் விரித்துரைப்பதாக அமைந்துள்ளன. அம்பிகையின் நாமம் சொல்லும் தத்துவத்தின் அழகைக் கொண்டிருக்கும். ஒரு ஜீவன் ஆன்மிக யாத்திரையில் பயணிக்கும்போது மிகத் துல்லியமாக அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று உரைக்கும். தான் ஒரு ஜீவன் என்றும் தன்னை உடலோடும், மனதோடும் புத்தியோடும் வரையறுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த நாமங்களின் பொருள் உள் ஒளியைக் கொடுக்கும்.

அப்படி கொடுப்பதோடு மட்டுமல்லாது அந்த நாமமே மனதைத் தாண்டி உங்களை அழைத்துச் செல்லும். பிரம்மம் என்பது ரூபம், நாமம் எல்லாவற்றையும் தாண்டியது. ஆனால், அப்பேற்பட்ட லலிதா எனும் பிரம்மத்தை ஒரு ஜீவன் அடைய வேண்டுமெனில் இந்த நாமம் மட்டுமே தோணியாக இருந்து அடைய வைக்கின்றது. முதலில் நாமம் அர்த்தம் புரிகின்றதோ இல்லையோ உள்ளே செல்லும். பிறகு, அந்த நாமத்திற்குள் பொதித்து வைக்கப்பட்டிருக்கும் பிரம்மத்தின் தன்மையானது மொட்டு விடும் மலர்போல மனம் முழுவதும் பரவுகின்றது. மெல்ல இந்த நாமங்கள் மனதை அரித்து அரித்து மனமே இல்லாமல் செய்கின்றது.

ஏனெனில், மனம்தான் நீங்கள் என்று நினைத்திருப்பீர்கள். உடல்தான் நீங்கள் என நினைத்திருப்பீர்கள். மனம்தான் உடலை உருவாக்குகின்றது. அதனால்தான் தூக்கத்தில் மனம் காணாமல் போகும்போது உடலும் காணாமல் போகின்றது. மீண்டும் மனம் வரும்போது உடலும் தெரிகின்றது. உணரப்படுகின்றது. இதற்கு முன் சொன்ன நாமங்களான மனோரூபேஷு கோதண்டா, பஞ்ச தன்மாத்ர ஸாயகா போன்ற நாமங்கள் மனதையும், அந்த மனதை உருவாக்குகின்ற பஞ்ச பூதங்களின் சூட்சும விஷயத்தையும் கூறின. அந்த மனதையும், பஞ்ச இந்திரியங்களையும் உங்களால் கையால இயலாது.

அதாவது இந்த மனதைக் கொண்டு அதை அடக்கவோ அல்லது சரியான முறையில் ஆளவோ இயலாது. அதை அம்பிகையிடமே அளிக்க வேண்டும். இந்த நாமங்களை நாம் சொல்வதோடு மட்டுமல்லாமல் அதன் பொருளுணர்ந்து சொல்லும்போது மனம் சட்டென்று தியான நிலைக்குச் செல்கின்றது. அதனால், மிக மெதுவாக ஒவ்வொரு நாமத்தையும் பார்த்துக் கொண்டே நகர வேண்டும். ஒரு பெருங்காட்டை சுற்றிப் பார்க்கும்போது பறவைப் பார்வையில் பார்ப்பது ஒரு பார்வை.

அது அந்தக் காட்டினுடைய பிரமாண்டம் என்னவென்று தெரியும். இப்போது காட்டிற்குள் இறங்கி ஒவ்வொரு மரத்தையும் அதன் கிளைகளையும், இலையையும், பூக்களையும், கனிகளையும், பூமியின் அடியில் செல்லும் வேர்களையும் பார்த்துக் கொண்டே செல்வது போல லலிதா ஸஹஸ்ரநாமத்தை பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் என்ன ஆகும். மனம் தன்னால் ஒன்றும் ஆகாது. எல்லா பிரம்மாண்டமும் அவளின் கரங்களில் இருக்கின்றது. அவளின் கண்ணசைவில் நடக்கின்றது என்கிற விஷயம் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் உணர்வு மயமாக இருக்கும்.

அந்தப் பிரம்மாண்டத்தின் முன்பு நான் என்பது ஒன்றுமே இல்லை என்று மனம் அமைதியடையும். அந்த அமைதியடையும் மனமே பிரபஞ்சத்தின் ஆதார வஸ்துவாகிய லலிதா என்கிற பிரம்மத்தை தரிசிக்கக் கூடிய தகுதியைப் பெறுகின்றது. இந்த நாமங்கள் அனைத்தும் அதை உருவாக்கும் எனில் அது மிகையில்லை. இப்போது நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் பிரஹ்மாண்ட மண்டலா என்கிற நாமத்தை பார்ப்போம். இந்த நாமத்திற்குப் பிறகு அம்பிகையின் சகுண ரூபத்தை அதாவது கேசத்திலிருந்து பாதம் வரை வர்ணிக்கப்போகின்றது.

அதற்கு முன்பாக அம்பிகை எத்தனை பிரமாண்டமானவள் என்பதை இந்த நாமம் உரைத்து விட்டு தொடங்கப் போகின்றது. இப்போது நாமத்திற்கு வருவோம். தன்னுடைய இளஞ் சிவப்பு ஒளியினால், ஈர்ப்பினாலும் இந்த ஒட்டுமொத்த பிரம்மாண்டத்தையும் மூழ்கச் செய்பவள். வியாபித்திருப்பவள் என்றும் பொருள். இங்கு அம்பிகைக்கு அருணா என்று பெயர் வருவதை பாருங்கள். இதற்கு முன்பு வந்த நாமங்கள் அனைத்துமே ஒரு ஆன்மீக சாதகனுக்கு அவனுக்குள் நடக்கும் படிநிலைகளை குறிக்கின்றன.

அதாவது தன்னுடைய குணங்கள், ராக துவேஷங்கள், அதற்கு அடிப்படையான மனம் அதற்கும் அடிப்படையான பஞ்ச பூத தன்மாத்திரைகளை அவனுக்குள் உணர்ந்து உணர்ந்து தனக்குள்ளும் இவ்வளவு விஷயங்களா என்று ஒடுங்கிக் கொண்டே செல்கிறான். அப்படி உள்ளே செல்லச் செல்ல ஆத்ம சொரூபத்தின் தரிசனத்தை பெறுகின்றான். அப்படியே உள்ளுக்குள் அந்த பேரொளியை பார்த்தபடி இருக்கின்றான். அது பார்த்தல் என்பதைத் தாண்டி உணர்தல் என்கிற சமாதி அவஸ்தையை குறிக்கும்.

ஏனெனில், அருணா என்கிற சிவப்பான ஒளியை வேதாந்த நூல்கள் சமாதி அவஸ்தையாக வர்ணிக்கின்றன. இதுவரை தான் பார்த்துக் கொண்டிருந்த அந்த சைதன்யம் தனக்குள் மட்டுமல்லாமல், மொத்தப் பிரபஞ்சம் முழுவதும் அதுதான் நிறைந்திருக்கிறது என்கிற உண்மை புலப்படுகின்றது. நான் என்னை அறிகின்றேன் என்று தொடங்கிய இடம் இப்போது என்னை அறிவது என்பதும் போய், அவளே அனைத்துமாகவும் நிறைந்திருப்பது புரிகின்றது.

அம்பிகையே ஆத்மாவாக அனைத்துமாக இருக்கிறாள் என்று உணரக் கூடிய, அனுபூதி நிலையை காட்டுவது இந்த நாமம். இப்போது இதை அறிபவன் என்பவன் எங்கு செல்கிறான். அவனுக்கு எங்குமே இடமில்லை. அவன் கடலில் சென்று கலந்து விடுகின்றான். சிறு நதியில் நீராடிய சாதகன் கடலைக் கண்டு வியக்கின்றான். அங்கு கலக்கின்றான். இந்த நாமத்தை கவனியுங்கள். மஜ்ஜத் பிரம்மாண்ட மண்டலா. இந்த பிரம்மாண்டத்தைச் சொல்லும்போது பூமி, வானம், சூரியன், சந்திரன் மற்ற நட்சத்திரங்கள் பால்வெளி மண்டலம் என்கிறோம். இதையே அண்டம் என்கிறோம்.

இதுபோன்ற பல கோடி அண்டங்கள் சேர்ந்தது அகிலாண்டம். இதுபோன்று பல கோடி அகிலாண்டம் சேர்ந்தது பிரமாண்டம் என்று ஆகின்றது. இது போல பல கோடி பிரம்மாண்டத்தையும் உணர்கின்றான். இவை எல்லாமுமே நம் மனதினால் கற்பனை செய்ய முடியாதது. இந்த மொத்தத்தையும் அவளே நிரப்பிக் கொண்டிருக்கிறாள். அவளே நிறைந்திருக்கின்றாள். அவளுடைய ஒளி அத்தனையையும் நிரப்பிக் கொண்டிருக்கின்றது.

ஸ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ணன் எப்படிப்பட்டவன் என்று சுகப்பிரம்மம் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் பரீட்சித் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவார். ராஜ வாத்தியமான வீணையினின்று வெளிப்படும் நாதம்போல, சுகாச்சார்யாரின் வாக்குகள் கம்பீரமாக இருந்தன. ஹே… பரீட்சித் ராஜனே.. கேள் எனும்போது நிமிர்ந்தான். தலை திருப்பி பார்க்கும் ரிஷியின் கருணைப் பார்வையில் குழைந்தான். ‘‘அந்தப் பிரம்மம் அண்ட பேரண்ட பிரபஞ்சத்தையே தன் திருமேனியாக கொண்டுள்ளது’’ என்று தொடங்கியபோது தன்னை ஒரு வெற்றிடமாக உணர்ந்தான். குழலுக்குள் புகுந்தோடும் காற்றுபோல கிடந்தான். அவனின் மனக் கூர்மையை உணர்ந்தவர் கண்கள் மூடினார்.

வலக்கையை மேலே தூக்கி விரல்களை மலர்ந்த தாமரைபோல வளைத்தார். ‘‘ஆஹா… ஈரேழு உலகங்களும், வலதும், இடதும், மேலும் கீழும் விராட் புருஷன் என்று நாமத்தோடு அழைக்கும்படியாக பரவியிருக்கிறான். இந்த ஜகம் முழுதுமே அவனது சரீரமாக விரிந்திருக்கிறது. இதோ இந்த பூலோகத்தின் வெகு கீழே அதல பாதாளமே அவனின் திவ்ய பாதங்களாக பரிமளிக்கின்றன. புறங்கால்கள் ரசா தளமாக மேலிருக்கிறது. இவற்றை இணைக்கும் மகாதளமே அவனது மூட்டு. தலாதளமும், சுதலமும் கணுக்கால்களாகவும், முழங்கால்களாகவும் நீண்டிருக்கின்றன.

விதளம், அதளம் ஆகிய இரு உலகங்களும் எம்பெருமானின் திருத்தொடைகளாக கம்பீரம் காட்டுகின்றன. அதற்கு சற்று மேலுள்ள ஜனன இந்திரியங்களே பூலோகமாக மலர்ந்திருக்கிறது’’ என்றவுடன் ஏனோ எல்லோரும் கங்கையை பார்த்தனர். எப்பேற்பட்ட தபஸ்வி இவள். இத்தனை யுகங்களாக இத்தனை உலகங்களுக்குள்ளுமா ஊடறுத்து வருகிறாள். அதல பாதாளத்திலிருந்து வெள்ளிக் கம்பி இழைபோல பிரயாணிக்கும் தபஸ்வியை தொலை தூரத்தினின்று பார்த்து வணங்கினர். சுகப் பிரம்மரிஷி வானம் பார்த்தார்.

‘‘அதோ…. நீலமேக வானமே அவனின் நாபி. அந்த பரம்பொருளின் திருவயிறே சமுத்திரமாக பரவியிருக்கிறது. பூலோகத்தையும் வானத்தையும் தாண்டிய அரூபமான சொர்க்கலோகமே அவனின் மார்பு. அந்த ஸ்தனங்களிலிருந்துதான் தர்மத்தை பொழிகிறார். இன்னும் சற்று மேலே இருக்கும் மஹர் லோகத்தையே கழுத்தாக கொண்டிருக்கிறான். காண்போரை வசீகரிக்கும் திருமுகமே ஜனலோகம். தவத்தினால் சிவந்த அந்த பிரதேசத்தை தனது நெற்றியாக, ஆக்ஞா சக்கரம் குண்டலினியின் கிளர்ச்சியாக இங்கு வெளிப்படுகிறது. ஞானாக்னியால் ஜொலிக்கும் முகமே அவனின் பிரகாசம்.

சூரிய, சந்திரர்களே கண்களாக ஒளிர்கின்றனர். பிரகாசத்தை மறைக்கும் இருளையே இமைகளாக கொண்டிருக்கிறான். சகல உலகங்களின், செயல்களையும் காரியமாற்றும் விதத்தில் இந்திராதி தேவர்கள் அனைவரும் கரங்களாக விளங்குகின்றனர். கருவியாக அவன் ஆணையிட்டதை செய்து முடிக்கின்றனர். மனு எனும் தேவனே அவனின் புத்தியாக இருக்கிறான். அப்பேற்பட்டவனின் சிறு புன்னகைக் கீற்று மாயையாக மூடியுள்ளது. எல்லாமாக பிரிந்துள்ளது. தனது கடைக்கண் பார்வையினால் காண சிருஷ்டி பல்கிப் பெருகுகின்றன.

இப்படி உடலைத் தரித்தவன் காலங்களை தனது ஆடையாக அணிந்துள்ளான். எல்லாவற்றினுள்ளும் காலதேச வர்த்தமானங்களை தாண்டிய வேதங்களையே சிரஸாக கொண்டுள்ளான். வேதப் பொருளாகவும், வேதத்தின் உச்சியாகவும் உள்ள அந்த பரம புருஷனான மன் நாராயணனை இந்த விராட் சொரூபத்திலேயே தியானிக்க வேண்டும். அப்போதுதான் இந்த சித்தம் திடப்படும். அகங்காரம் எங்கேயோ கரை ஒதுங்கிய கடல் கிளிஞ்சலைவிட சிறியது என்பது புரியும். நான்தான் காரியமாற்றுகிறேன் எனும் நினைப்பு அறுபடும்.

உன் காரியங்கள், உன் தூக்கம்போல தானாக நடைபெறும். நீ அதற்கு வெறும் சாட்சியாக இருப்பாய்’’ என்று சொன்னபோது எல்லோருடைய கண்களும் இமைக்காது சுகப் பிரம்மரிஷியை பார்த்தபடி இருந்தன. அடுக்கி வைத்த கற்கள்போல அவன் மனவெளியில் பேரண்டத்தை படிப்படியாக எழுப்பினார். ‘‘என் பிரியத்திற்குரிய ராஜனே… எங்கே இப்போது நான் சொன்ன விராட் சொரூபனாக உள்ள நாராயணனை தியானி பார்ப்போம்’’ என்று முடித்தார்.

எனவே, இந்த நாமம் சொல்லும் அர்த்தம் பொருளோடு உண்மை புலப்பட்டால் மட்டுமே அடுத்து வரும் நாமங்களின் அர்த்தம் புரியும். அதையும் நாம் பார்க்கலாம். இவை எதுவும் என் முயற்சியை தாண்டியல்லவா நிகழ்கின்றது வியப்படைந்து தன்னை முற்றிலும் ஒப்புவிக்கின்றான்.

லலிதா சஹஸ்ரநாமம் கூறும் பரிகாரம்

நம் தலைக்கு மேல் பிரச்னை ஓடிக் கொண்டிருந்தால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது நாம் இந்த நாமத்தை பொருளோடு கூறும்போது சட்டென்று அங்கு மாற்றம் நிகழும். தன்னால் எதுவும் முடியாது என்று மனம் சரணடையும்போது அம்பிகை தன் அருட்கரங்களால் நம்மை ஆற்றுப்படுத்துகின்றாள்.

நாமம் சொல்லும் கோயில்

சிதம்பரத்தின் எல்லையில் அமைந்திருக்கும் தில்லை காளி. சகலத்தையும் நிறைத்துக் கொண்டு இருக்கும் சக்தியின் அனுபூதி நிலையை குறிக்கும் கோயில் இது. பிரம்மா தில்லையின் எல்லையில் அமர்ந்த காளியின் உக்கிரத்தை வேத மந்திரங்களால் குறைத்தார். உக்கிரம் குறைந்த சக்தி தனியே காளியிடமிருந்து பிரிந்து, பிரம்மசாமுண்டியாகி தனியே அமர்ந்தது. நான்கு வேதங்களால் உக்கிரம் குறைந்ததால் இவளுக்கு நான்கு முகங்கள். பிறகு மூல சக்தி, மெல்ல தில்லையம்பலம் ஏகினாள்; சிவகாமியாய் சிவனின் இடப்பாகத்தோடு ஒன்றினாள்.

இன்றும் இவ்வாலயத்தினுள் நுழைய மென்மையாய் ஒரு தணல் நம்மை சூழ்ந்து கொள்ளும். காளியின் உக்கிரமும், பிரம்மசாமுண்டியின் சாந்தமும் அதில் ஒரு சேரக் கலந்திருக்கும். ஒரு மாபெரும் நிகழ்வின் தாக்கம் சந்நதிகளில் அதிர்வுகளாய் விரவியிருக்கும். கோயிலின் முகப்பிலிருந்து நேர் சந்நதியில் பிரம்மசாமுண்டி நான்கு முகங்களோடு மலர்ச்சியாய் காட்சி கொடுப்பதை பார்க்க மேனி சிலிர்த்துப்போகும். எல்லா அபிஷேகங்களும் தில்லை அம்மனுக்கு செய்யப்படுகிறது. தேன் அபிஷேகம் தில்லை அம்மனுக்கு மிகவும் உகந்ததாகும்.

தில்லை காளி தனியே உக்கிரமாய் அமர்ந்திருக்கிறாள். ஆனால், நெருங்கி வருவோரை கருணை மழையால் நனைக்கிறாள். முகத்தில் பொங்கி வழியும் கோபத்தின் நடுவே, மெல்லிய புன்னகையில் அருள் மழை பொழிகிறாள். தில்லை காளியன்னைக்கு நல்லெண்ணெயால் மட்டுமே அபிஷேகம் செய்கிறார்கள். வேறு அபிஷேகம் செய்தால் காளி குளிர்ந்து விடுவாளோ, அவள் குளிர்ந்தால் தீயவர்கள் பெருகிவிடுவார்களோ என்று அக்காலத்திலிருந்தே வெறெந்த அபிஷேகமும் செய்வதில்லை. காளியன்னையை குங்குமம் கொண்டு சிவக்கச் செய்திருக்கிறார்கள்.

அன்னையை வெண் உடையில் அலங்கரித்திருக்கிறார்கள். குங்குமமும், வெண்மையும் கலந்த காளியன்னை வெண்சிவப்பாய் ஒளிர்கிறாள். அருகில் வருவோரின் வாழ்வில் ஒளியூட்டுகிறாள். அவளின் சந்நதியில் சிறிது நேரம் நிற்க ஜென்மங்களாய் வந்த தீவினைகளை தன் அருட்பார்வை கொண்டு கணநேரத்தில் களைகிறாள். தீய சக்திகளால் பாதிக்கப்பட்டோர் இத்தலத்து காளியின் முன்பு அமர பாதிப்புகள் பஞ்சாய்ப் பறந்து போகும். கைகூப்பி வேண்டியதைக் கேட்போருக்கு இக்கோயில் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். சாக்தம் எனும் சக்தி உபாசகர்களுக்கு இக்கோயில் ஒரு தவக்குகை.

The post சரணடைந்தோரை தேற்றும் நாமம் appeared first on Dinakaran.

Tags : Arudshakti ,Adi Shakti ,Lalita Sahasranamas ,Ramya Vasudevan ,Dinakaran ,
× RELATED அருள்மழை பொழியும் அகிலாண்டேஸ்வரி