×

தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. பிளஸ்2 முடித்த மாணவ-மாணவிகள் உயர் கல்வியை தொடரும் வகையில் பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட இளங்கலை வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டினர். வழக்கம் போல இந்த ஆண்டும் பி.காம் பாடப்பிரிவுகளுக்கு கடுமையான போட்டி ஏற்பட்டது. அரசு உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பி.காம் பாடப்பிரிவு கிடைத்தது.

பிளஸ்2 தேர்வு முடிவு வந்தவுடன் மாணவர் சேர்க்கையை கல்லூரி கல்வி இயக்ககம் தொடங்கியது. இந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 35 ஆயிரம் விண்ணப்பங்கள் முறையாக பெறப்பட்டன. 1 லட்சத்து 7 ஆயிரம் இடங்களுக்கு 2 கட்டமாக கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டு 84,899 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் 22 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு இன்று நேரடி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பி.சி. இனத்தவர்களுக்கு நாளையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 5ம் தேதியும், எஸ்.சி-க்கு 6ம் தேதியும், 7ம் தேதி தகுதி உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ‘வராண்டா’ கலந்தாய்வு கல்லூரிகளில் நடைபெறுகிறது.

இதற்கிடையில் நேற்று முதலாம் ஆண்டு மாணவ-மாணவர்களுக்கு திட்டமிட்டபடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகமாக வகுப்புகளுக்கு சென்றனர். புதிதாக வந்த மாணவ-மாணவிகளை கல்லூரியின் மூத்த மாணவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என பலரும் வரவேற்றனர். சில கல்லூரிகள் உயர் கல்வி வழிகாட்டி கலந்தாய்வு நடத்தவும் முடிவு செய்து உள்ளன. அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் இல்லாமல் ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு உயர் கல்வி தூண்டுதல் நிகழ்ச்சி, வேலைவாய்ப்பு பற்றி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, மாநில கல்லூரி, நந்தனம், வியாசர்பாடி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு வரும் 13ம் தேதி வரை ஒழுக்க நெறிமுறைகள் குறித்த வகுப்புகள் ஆகியவற்றை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கல்லூரி முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.

The post தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,
× RELATED புதுச்சேரியில் 21-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்