×

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து : திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

புபனேஷ்வர் : ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :

கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 230-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது நாட்டையும் – நாட்டு மக்களையும் உலுக்கி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ள இந்த படுமோசமான விபத்தில் 900-த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இத்தகைய சோகமான சூழ்நிலையில், தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியவர்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், மனித நேயத்திற்காகவும் உரக்கக் குரல் எழுப்பிப் பாடுபட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவது சரியல்ல என்று கழகத் தலைவர் அவர்கள் முடிவு செய்துள்ளார்.

ஆகவே இன்றைய நாள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு மட்டும் மரியாதை செலுத்தி, இந்த பயங்கரமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மற்றபடி, முத்தமிழறிஞர் கலைஞரின் 100-ஆவது பிறந்தநாள் தொடர்பாக இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் – பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

இன்று வடசென்னையில் நடைபெறுவதாக இருந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் வேறொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து : திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : artist centenary celebrations ,Odisha train accident ,DMK ,Bhubaneswar ,Odisha ,train accident ,Dinakaran ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்