×

பெரியாறு கால்வாயை சிமென்ட் கால்வாயாக அமைக்க வலியுறுத்தல்

சிவகங்கை: சிவகங்கை நகரின் மைய பகுதியில் உள்ள சுமார் 6 ஏக்கர் பரப்பளவுள்ள தெப்பக்குளம் 300 ஆண்டுகள் பழமையானது. சிவகங்கை தெப்பக்குளத்தில் பெரியாறு நீர் நிரப்ப வேண்டும் என்று நீண்ட நாள்களாக கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, 20 ஆண்டுகளுக்கு பிறகு பெரியாறு நீர் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபரில் நிரப்பப்பட்டது. பெரியாறு கால்வாய் மேலூர் பிரிவில் அனைத்து கால்வாய்களையும் அடைத்து விட்டு, தெப்பக்குளத்திற்கு மட்டும் நீர் வரும் வகையில் திறக்கப்பட்டது. ஆனால் இடையமேலூர் உள்பட பல்வேறு இடங்களில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறியதால், தெப்பக்குளத்திற்கு நீர் வருவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் உடைப்பு ஏற்பட்ட இடங்கள் சரி செய்யப்பட்டு ஒரு வழியாக சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகில் காஞ்சிரங்கால் பகுதிக்கு நீர் வந்தது.

திருப்பத்தூர் சாலையில் நீர் வந்த போது கால்வாய் மேடாக இருந்ததால் அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியில் பாய்ந்தது. இப்பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலக பூங்கா மற்றும் ஆர்ச் பகுதியை நீர் கடப்பதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கால்வாயில் நீர் அதிகமாக வந்தும் தெப்பக்குளம் வந்து சேர்கையில் மிகக்குறைவான அளவே வந்தது. காஞ்சிரங்கால் வரை அதிகப்படியாக வரும் நீர் அதே அளவில் தெப்பக்குளத்திற்கும் வந்திருந்தால் கூடுதல் நீர் குளத்திற்கு வந்திருக்கும். ஆனால் கால்வாய்களில் குறைவான அளவில் நீர் வந்ததால் தெப்பக்குளத்தில் நீர் நிரப்புவதில் பாதிப்பு ஏற்பட்டது. ஏராளமான தண்ணீர் வீணானது. காஞ்சிரங்கால் வரை சிமெண்ட் கால்வாய் உள்ள நிலையில் அதன் பிறகு சுமார் 1 கி.மீ தூரம் மண் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாத நிலையில் பெரியாறு நீர் கொண்டு வருவதற்காக புதிதாக வெட்டப்பட்டது. தற்போது கால்வாயாக உள்ள நிலையில் தொடர்ந்து பராமரிப்பில்லாமல் போனால் மண் சரிந்து கால்வாய் மூடப்பட்டு விடும். எனவே இந்த கால்வாயை சிமென்ட் கால்வாயாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சிவகங்கை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘‘சிமென்ட் கால்வாய் அமைத்தால்தான், பெரியாறு கால்வாய் நீர் மட்டுமல்லாது மழைநீரும் குளத்திற்கு செல்ல ஏதுவாக இருக்கும். தற்போது மண் கால்வாய் இருபுறமும் சரிந்து மேவி வருகிறது. எனவே சிமென்ட் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



Tags : Periyar ,
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...