×

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கால்வாய்கள் தூர்வாரப்படும் நகராட்சி சேர்மன் உறுதி

காரைக்குடி, மார்ச் 24: காரைக்குடி செக்காலை சிவன் கோவில் குளத்தை சுற்றி நடைபாதை மற்றும் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கவிழா நடந்தது. நகர்மன்ற உறுப்பினர் நகராட்சி ஆணையர் லட்சுமணன் தலைமை வகித்தார். நகராட்சி சேர்மன் முத்துத்துரை திட்டத்தை துவங்கி வைத்து பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இயற்கையை பாதுகாக்க வேண்டும், நீர்நிலைகளை பாதுகாத்து மேம்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதன்படி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து குளம், கண்மாய்கள், வரத்து கால்வாய்கள் தூர்வாரி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் உறுதுணையுடன் இந்நகராட்சிக்கு தேவையான அடிப்படை திட்டங்களை மேற்கொள்ள நிதி பெறப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 46 கோடிக்கு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஆட்சியிலும் செய்யாத மகத்தான மக்கள் நலதிட்டங்களை முதல்வர் அறிவித்து உடனடியாக செயல்படுத்தி வருகிறார்கள். முதல்வரின் அறிவிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டு நகர் பகுதி மற்றும் குப்பை கிடங்கில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்நகரை பொறுத்தவரை மழைநீரை முறையாக சேமிக்க கூடிய வகையில் குளங்கள், வரத்து கால்வாய்களும் வடிவமைப்புடன் கூடியது. கடந்த காலங்களில் முறையாக பராமரிக்காததால் ஆக்கிரமிப்பு மற்றும் மண் அடைத்து காணப்படுகிறது.

இவற்றை சரி செய்து மழைநீர் குளத்தை வந்தடையும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கால்வாய்கள் தூர்வாரப்படும். குளங்களிலும் தண்ணீர் தேங்கும் வகையில் தூர்வார்ப்படும். இக்குளத்தை சுற்றி மக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டு, சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்படும் என்றார். மாவட்ட பிரதிநிதி சொக்கலிங்கம், நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்தி, திவ்யாசக்தி, கலாகாசிநாதன், மலர்விழி பழனியப்பன், சாந்தி நாச்சியப்பன், ராணிசெய்துன்சேட், அமுதாசண்முகம், ஒன்றிய துணைசெயலாளர் சத்யாராஜா சங்கராபுரம் ஊராட்சி கவுன்சிலர் தெரசா, வட்டசெயலாளர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு