×

கரைப்புதூர் நீர் ஆதார குட்டையை மாசு அடைய செய்ய வேண்டாம்

பல்லடம்: பல்லடம் அருகே கரைப்புதூர் நீர் ஆதார குட்டையை மாசு அடைய செய்ய வேண்டாம் என கரைப்புதூர் கிராம மக்கள் வலியுறுத்தினர்.  திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம்  ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஊராட்சி தலைவர் பாரதி சின்னப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கரைப்புதூர் கிராம பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஆனந்தா ஆதித்யா கார்டன், அண்ணா நகர் பகுதியில் இருந்து கழிவு நீரை மழை நீர் வடிகால் என்ற பெயரில் சாக்கடை கால்வாய் அமைத்து கரைப்புதூருக்கு நீர் ஆதாரமாக இருந்து வரும் ஊர் குட்டையில் விடுவதாகவும், அல்லது அருகில் ஜோக் பிட் அமைப்பதாகவும் தகவல் வருகிறது. இதனால் கரைப்புதூர் ஊர் குட்டை மாசு அடைந்துவிடும்.

இந்த குட்டை நீரை வாழும் கரைப்புதூர் மக்களுடைய நீராதாரம் பாதிக்கப்படும். உலக தண்ணீர் தினத்தின் அவசியத்தை மக்களுக்கு விழிப்புணர்வு மூலம் உணர்த்த கிராம சபை கூட்டம் நடத்தி குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண தமிழக அரசு வழி வகை செய்துள்ளது. கரைப்புதூர் ஊராட்சி ஊர் குட்டையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி பகுதிக்குள் ஜோக் பிட் அமைத்து கரைப்புதூர் மக்களுடைய நீர் ஆதாரத்தை, சுகாதாரமான வாழ்க்கையையும் பாதுகாத்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். அதேபோல கரைப்புதூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமையில் ஊராட்சி செயலர் காந்திராஜ் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கரைப்புதூர் கிராம பொதுமக்கள் பேசுகையில், ‘‘கரைப்புதூரில் மக்களுக்கு நீர் ஆதாரமாக இரண்டு குட்டைகள் இருந்து வருகிறது.

ஊரை ஒட்டிய குட்டை குடிநீர் ஆதாரமாக வழங்கி வருகிறது. இந்த குட்டையில் ஆறுமுத்தம்பாளையம் ஊராட்சி பகுதியில் இருந்து கழிவுநீரை கொண்டு வந்துவிடும் முயற்சி நடந்து வருகிறது. மக்களுக்கு வாழ்வாதாரத்துக்கு விவசாயத்துக்கும் பயன்படுத்தி வரும் பெரிய ஓடையில் இந்தியா சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்ட நீர்வழி தடுப்பு அணையில் மழைக்காலங்களில் நீர் வழிந்து ஓடும். இப்பகுதியில் இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு நீர் தட்டுப்பாடு வந்ததில்லை.  கரைப்புதூர் ஊராட்சி சார்பில் செந்தூரான் காலனி, எம்ஜிஆர் நகர், உப்பிலிபாளையம் போன்ற பகுதிகளில் இருக்கும் கழிவு நீரை, மழை நீரில் கலக்க முயற்சி நடந்து வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு உலக தண்ணீர் தினத்துக்குள் கரைப்புதூர்  தண்ணீர் இல்லாமல் பாழாகும் நிலை உருவாகி விடும் ஆபத்து உள்ளது. இதனை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.




Tags : Karaipudur ,
× RELATED பல்லடம் அருகே பொன் நகரில் கனிமவள பாறை வெட்டி கடத்தல்