திருப்பூர், ஜன. 8: ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும். பணி நிரந்தரம் மற்றும் சம ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களின்படி நியாயமான ஊதியம், தற்போதைய விலைவாசி உயர்விற்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள், மாவட்ட பணியாளர்கள் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில், மாவட்டத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன அலுவலர்கள் சங்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தா, மாவட்ட செயலாளர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
