×

கயத்தாறில் சார்பதிவாளரை மாற்ற வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கயத்தாறு, மார்ச் 22: கயத்தாறு  சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க  வேண்டும். கயத்தாறு சுற்றுவட்டார விவசாயிகள் அரசு மானியத்தில் தாங்கள்  பெற்ற சொட்டுநீர் பாசனம் பற்றி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய  லஞ்சம் பெறுவதை தடுக்க வேண்டும். முறைப்படி நடக்கக்கூடிய  பாகப்பிரிவினைக்கு கூட லஞ்சம் கேட்டு ஏழைகளை தொந்தரவு செய்வதை கண்டித்தும், கயத்தாறு சார் பதிவாளரை பணியிடை நீக்கம்  செய்யக் கோரியும் கடந்த 6ம் தேதி தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர்  நாராயணசாமி தலைமையில் கயத்தாறு சார் பதிவாளர் அலுவலகம் முன்பு முற்றுகை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு தெரிவித்து  நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, பேச்சுவார்த்தைக்கும் அழைக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் கயத்தாறு சார் பதிவாளர்  அலுவலக வளாகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இப்பிரச்னை குறித்து மாவட்ட பதிவாளரிடம்  தெரிவிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதில் கயத்தாறு வட்டாரத்  தலைவர் அழகுபாண்டி, மேற்கு மாவட்ட தலைவர் வெள்ளத்துரை பாண்டி, வடக்கு  மாவட்ட தலைவர் நடராஜன், மாநில துணைத் தலைவர் நம்பிராஜன், பொருளாளர்  சுப்பாராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு சார் பதிவாளரை கண்டித்து கோஷங்கள்  எழுப்பினர். கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர்  பாஸ்கரன், உதவியாளர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்தனர்.

Tags : Kayathar ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...