×

பங்குனி தேர் திருவிழா நிறைவு திருவெள்ளறை பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பாடு

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோயிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் புறப்பாடு நடைபெற்று வந்தது. 8ம் நாளான கடந்த 17ம் தேதி பெருமாள் வண்டுலூர் சப்பரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அதன்பின் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 18ம் தேதி கோலாகலமாக நடந்தது. அதனை தொடர்ந்து தீர்த்தவாரி நடந்தது. 10ம் நாளான நேற்றுமுன்தினம் காலை 10 மணிக்கு கத்யத்ரய கோஷ்டி நடந்தது. திருவாராதனம், திருமஞ்சனம், அலங்காரம், கோஷ்டி உபயக்காரர் மரியாதையாகி மாலை 5.30 மணிக்கு பெருமாள், தாயார் கண்ணாடி அறையில் இருந்து புறப்பாடாகி இரவு 7.30 மணிக்கு தாயார் சன்னதி எதிரே உள்ள ஆனந்தராயர் மண்டபம் சென்றடைந்தனர். அங்கு தாயார் பங்கஜவல்லி, செங்கமலவல்லி ஆகியோருடன் சேர்த்தி சேவை நடந்தது. பின்னர் இரவு 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்நிலையில் பங்குனி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று, பெருமாள் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி மாலை 5 மணியளவில் தாயார் சன்னதி மண்டபம் சென்றடைந்தனர். அங்கு திருவாராதனம், அலங்காரம் கண்டருளிய பின்னர், பெருமாள் இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்கில் புறப்பட்டு திருவீதிவலம் வந்து இரவு 10 மணிக்கு பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, திருவெள்ளறை கோயில் தக்கார் செல்வராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags : Bankuni Cheru festival ,Tiruvathara Perumal ,Pallak ,
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு