×

குன்னம் அருகே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

குன்னம்: குன்னம் அருகே உள்ள கிளியூர் கிராமத்தில் சுகாதாரமான தண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கிளியூர் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நன்னை கிராம ஊராட்சிக்கு உட்பட்ட இக்கிராமத்திற்கு நாள்தோறும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த தண்ணீர் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு அதிக அளவில் சுண்ணாம்பு கலந்து கால்சியத்துடன் இருப்பதால், இதனை குடிக்கும் பொது மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் நோய் தொற்றுகள் ஏற்படுவதோடு சிறுநீரக கோளாறும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். கடந்த வாரம் கூட ஊராட்சி மூலம் புது போர்வெல் அமைத்து தண்ணீர் வழங்கப்பட்டது.

ஆனால் அந்த குடிநீரும் சரியில்லை எனவும் பல வருடங்களாக மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஊராட்சி அலுவலகங்களில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த கிளியூர் கிராம பொதுமக்கள் மற்றும் பெண்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் திடீரென நன்னை துணை மின் நிலையம் அருகே பெருமத்தூர் சாலையில், காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த குன்னம் போலீசார் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கை விரைந்து செயல்படுத்தப்படும் என்று உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதனை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Kunnum ,
× RELATED குன்னம் அடுத்த எழுமூர் கிராமத்தில்...