×

மறைந்த பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சிலை நிறுவ இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25ம் தேதி திறக்கிறார்

மதுரை, மார்ச் 21: மதுரையில், திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சிலை நிறுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 25ம் தேதி திறந்து வைக்க உள்ளார். பக்தி பாடல்கள், மற்றும் திரைப்படத்தில், சிவாஜி, எம்ஜிஆர், ஜெய்சங்கர், கமல், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைப்பட நட்சத்திரங்களுக்கு, திரைப்பாடல்களுக்கு பின்னணி பாடியவர் டி.எம்.சவுந்தரராஜன். இவர் பல ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். இவர் பிறந்து வளர்ந்தது மதுரையில்தான். இதனால் இவருக்கு மதுரை தவிட்டுச்சந்தையில் சிலை அமைக்க வேண்டும் என மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ புதூர் பூமிநாதன் சட்டசபையில் கோரிக்கை மனு அளித்திருந்தார்.

அதேபோல், கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு சிலை வைத்து அதை தாங்களே நேரில் வந்து திறக்க வேண்டும் என புதூர் பூமிநாதன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார். இதையடுத்து சிலை வைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து, சிலை வடிவமைக்கப்பட்டது. தற்போது சிலையை எந்த இடத்தில் வைப்பது என இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம்காட்டி வருகின்றனர்.

சிலையை நிறுவ மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் அருகில், முனிச்சாலையில் தினமணி திரையரங்கம் இருந்த இடம் அருகில் மற்றும் திருமலை நாயக்கர் அரண்மனை பூங்கா அருகில் என மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் எந்த இடத்தில் சிலைக்கான பீடம் அமைப்பது என ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது. இதற்கிடையே வரும் 25ம் ேததி மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னணி பாடகர் டிஎம்.சவுந்தரராஜன் சிலையை திறந்து வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. சிலையை நிறுவுவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சில இடங்களை தேர்வு செய்து மதுரை கலெக்டர் அனீஷ் சேகரிடம் தெரிவித்துள்ளது.

Tags : DM Soundararajan ,Chief Minister ,MK Stalin ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...