×

பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை பட்ஜெட் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து ஆவடி மாநகராட்சியில் தீர்மானம்

ஆவடி:  தமிழக பட்ஜெட்டில், செப்.15 முதல்  பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் அறிவிப்புக்கு ஆவடி மாநகராட்சி  பணிக்குழு தலைவர் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார். ஆவடி மாநகராட்சியில், இந்த ஆண்டின் முதல் மாதாந்திர மாமன்ற கூட்டம் நேற்று காலை 11:00 மணி அளவில்  நடைபெற்றது. மேயர் ஜி. உதயகுமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, கடந்த 2022 - 23 ம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்கு மற்றும் 2023 - 24 ஆண்டுக்கான திட்ட மதிப்பீடுடன், இந்த ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர், மாநகராட்சி கமிஷனர் பேசுகையில், ‘‘மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்க, புதிய வரி இனங்களை கண்டுபிடிக்கும் ‘பைலட் ப்ராஜெக்ட்’ எனும் கள ஆய்வு குறித்து விவரித்தார். புதிய வரி விதிப்பு தொடர்பாக, தனியார் பங்களிப்புடன் நடக்கும் இந்த கள ஆய்வு வாயிலாக, அடுத்த நான்கு மாதங்களில், மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து தீர்மானங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 வது வார்டு உறுப்பினர் ஜான் பேசுகையில்,‘‘எனது வார்டில் உள்ள, மூர்த்தி தெருவில், மழை காலத்துக்கு முன்பு ரூ.9.4 லட்சம் மதிப்பில், ஈர கலவை கொண்டு ‘வெட் மிக்ஸ்’ சாலை அமைக்க கோரிக்கை வைத்திருந்தேன். தற்போது மழை காலம் முடிந்து விட்டதால், அதே செலவில் தார் சாலை அமைக்க வேண்டும்.’’  என கோரிக்கை வைத்தார். தி.மு.க., 28 வது வார்டு கவுன்சிலர் அமுதா கூறுகையில்,  

‘‘தற்போது நாள் ஒன்றுக்கு 13 லட்சம் கன அடி குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது. கோடை காலத்துக்கு முன்பு கூடுதலாக 3 லட்சம் கன அடி குடிநீர் பெற வழிவகை செய்ய வேண்டும். அதேபோல், மழைநீர் கால்வாய் தூர் வாராமல், அரை அடிக்கு தான் தண்ணீர் செல்கிறது. அதை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என கூறினார். பின்னர், பேசிய 22 வது வார்டு உறுப்பினர் ஜோதிலட்சுமி மற்றும் துணைமேயர் சூரியகுமார் ஆகியோர் ‘‘குப்பை வண்டிகளில் உள்ள பேட்டரிகள் திருடப்படுகின்றன. அதனால் அவற்றை கண்காணிக்க சிசிடிவி அமைக்க வேண்டும்.’’என கோரிக்கை வைத்தனர்.

கூட்டத்தின் முடிவில், நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், செப். 15 முதல் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் அறிவிப்புக்கு ஆவடி மாநகராட்சி பணிக்குழு தலைவர் ஆசிம் ராஜா நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார். இதை தொடர்ந்து கூட்டம் முடிந்தது. நேற்று நடந்த கூட்டத்தில் மொத்தம் 152 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Aavadi Corporation ,
× RELATED பொங்கல் பரிசு தொகுப்பில்...