×
Saravana Stores

புதுவையில் 128 அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரம்

புதுச்சேரி,மார்ச் 21: புதுவையில் வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை   நடைமுறைப்படுத்த  மத்திய அரசிடம், கல்வித்துறை   விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.  புதுச்சேரிக்கு தனியாக கல்வி வாரியம்   இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத்திட்டமும்,   ஏனாமில் ஆந்திர மாநில பாடத்திட்டமும், மாகேயில் கேரள பாடத்திட்டமும்   பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 2011-ம் ஆண்டில் முதல்வர்   ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் அரசு புதுச்சேரியில் சிபிஎஸ்இ   பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. 2014-15ம் கல்வியாண்டு   1ம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த 2018-19 கல்வியாண்டில் 5ம் வகுப்பு வரையிலும் சிபிஎஸ்இ   பாடத்திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்பட்டது.

என்ஆர் காங்கிரஸ்- பாஜ   கூட்டணி அரசானது 6ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரைக்கும் சிபிஎஸ்இ   பாடத்திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை மேற்கொண்டு வந்தன. இந்த   கல்வியாண்டில் 6ம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அனுமதி   கேட்டு, புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை மத்திய இடைநிலை கல்வி   வாரியத்திற்கு விண்ணப்பித்தது. இதையடுத்து கல்வியமைச்சர் நமச்சிவாயம்,   மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார். அனைத்து அரசு பள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ   பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தற்போதைய   பட்ஜெட்டில் அறிவித்தார். இதையடுத்து அதற்கான நடவடிக்கைகளை கல்வித்   துறை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக   கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 6 முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்துக்கு கொண்டு வர நடவடிக்கை   எடுக்கப்படுகிறது. தற்போதுள்ள ஆசிரியர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்   திட்டத்திற்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்படும். புதுவையில் தற்போது 128 அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் தொடங்க கோரியுள்ளோம். மத்திய அரசும்   விரைந்து அனுமதி தருவதாக தெரிவித்துள்ளது. சிபிஎஸ்சி   பாடத்திட்டத்தின்படி புதுச்சேரி மாணவர்கள் கல்வி பயிலும்போது வரும்   காலங்களில் நீட், ஜேஇஇ தேர்வுகளை சிரமமின்றி எதிர்கொள்ள முடியும், என்றார்.

Tags : CBSE ,Puduvai ,
× RELATED பிப்ரவரி 15 முதல் தொடங்குகின்றன...