×

தஞ்சை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் உளுந்து சாகுபடி மகசூல் பாதிப்பு அதிக விலை போகாததால் விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் உளுந்து சாகுபடி மகசூல் பாதிக்கப்பட்டது. மேலும், விலையும் அதிகம் போகாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சம்பா பட்டத்தில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையால் பாதிக்கப்பட்டது. அதனால் இப்பகுதி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தார்கள். அவர்களின் வாழ்வாதாரம் கைவிட்டு போனது. இந்நிலையில்தான் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தை, மாசிப்பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து இப்போது அவர்களுக்கு கை கொடுக்கும் என எதிர் பார்த்த நிலையில், மீண்டும் விவசாயிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது மழை, இருந்தும் எப்போதும் போல தை-மாசி பட்ட உளுந்து சாகுபடி மூலமாக, ஓரளவுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சாகுபடி செய்த உளுந்தை தற்போது விவசாயிகள் அறுவடை செய்து அதை சாலை ஓரங்களில் காயவைத்து அவற்றை தரமாக பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை பங்குனி, சித்திரையிலும் கூட அதிகளவில் உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது. சொல்ல போனால், நெல்லைவிட, உளுந்துதான் டெல்டா விவசாயிகளுக்கு உற்ற தோழனாக திகழ்கிறது. குறைவான பராமரிப்பில், குறைந்த நாள்களிலேயே பயிர் அறுவடைக்கு வந்துவிடுகிறது. இந்த ஆண்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, சூரக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தை-மாசி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த உளுந்து அறுவடைக்கு வந்து, நிறைவான மகசூல் கொடுத்தாலும் அதை வாங்கும் தனியார் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இது குறித்து சூரக்கோட்டையை சேர்ந்த மனோகரன் என்ற விவசாயி கூறுகையில், பருவம் தவறிபெய்த மழையால் நெல்லில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை உளுந்தில் எடுத்து விடலாம் என நினைத்தபோது மழை பெய்து பயிர்கள் பாதி அழகிவிட்டது. மிஞ்சிய சில உளுந்து செடிகளை காப்பாற்றி அவற்றை காய வைத்து விற்க சென்றால் வியாபாரிகள் அதிலும் தரம் பிரித்து கிலோ 70,75,80, ரூபாய் என எடுக்கின்றனர். இது மிகவும் வேதனையாக உள்ளது. அரசு உளுந்து பயிர்களை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய் நிர்ணயம் செய்து குவிண்டால் 10 ஆயிரத்திற்கு எடுத்து கொண்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் ஓரளவிற்கு கைகொடுக்கும். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தார்.


Tags : Tanjore ,
× RELATED ஆம்புலன்சுக்கும் வழிவிட மறுத்ததால்...