×

தமிழ்நாடு முழுவதும் 245 நடமாடும் கால்நடை பராமரிப்பு வாகனங்கள் விரைவில் அறிமுகம்

செய்துங்கநல்லூர், மார்ச் 19:  தமிழ்நாடு முழுவதும் 245 கால்நடை பராமரிப்பு வாகனங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே ராமானுஜம்புதூரில் கால்நடை பராமரிப்புத்துறை தேசிய கால்நடை இயக்கம் சார்பில் கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வு முகாம், கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து நடந்த கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்டோர் பேசினர்.

கருத்தரங்கில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசுகையில், ‘தற்போதைய காலக்கட்டத்தில் விவசாயத்தோடு கால்நடை வளர்ப்பையும் செய்து வருவதால் விவசாயிகள் வாழ்வு மேம்பட்டு வருகிறது. தோட்டங்களில் ஊடு பயிராக பசுந்தீவனம் உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் அரசு மானியமாக வழங்குகிறது. கால்நடைகளின் விந்து உற்பத்திக்கு தமிழ்நாடு அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக, விந்து கொண்டு செல்ல குளிர்சாதன வசதியுடன் வாகனங்களை வழங்கி உள்ளது. பசுக்கள், காளைகள் என தனித்தனியான விந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,  ‘குக்கிராமங்களில் இதுபோல் கால்நடை விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தி கால்நடை வளர்ப்போர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

உள்நாட்டு கால்நடைகளை பராமரிப்பது குறித்து கருத்துரை வழங்கப்பட்டது. மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். தமிழ்நாடு முழுவதும் 245 நடமாடும் கால்நடை பராமரிப்பு வாகனங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. கால்நடை மருத்துவமனைகள் இல்லாத குக்கிராமங்கள் போன்ற பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதற்கென தனி செல்போன் எண் அறிவித்து அதில் அழைத்தால் கால்சென்டர் மூலம் இந்த வாகனங்கள் சம்பந்தப்பட்ட குக்கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது, என்றார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி  தலைவர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், கருங்குளம்  யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர்  பார்த்திபன், மாவட்ட ஆவின் சேர்மன் சிவகுமார், கருங்குளம் ஒன்றிய திமுக  செயலாளர்கள் தெற்கு கால்வாய் இசக்கி பாண்டியன், வடக்கு ராமசாமி, கிழக்கு  சுரேஷ் காந்தி, மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், ஸ்பிக் பகுதி செயலாளர்  ஆஸ்கர், மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி குமார்,  காங். மாவட்ட துணை தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ நேர்முக உதவியாளர் சந்திரபோஸ்,  கருங்குளம் வட்டார தலைவர் புங்கன், ஆறாம்பண்ணை பஞ்.  தலைவர் ஷேக் அப்துல்காதர், கருங்குளம் ஒன்றிய காங்கிரஸ் உறுப்பினர்கள் டைகர் மணி, மாரியப்பன், கிருஷ்ணன், வனிதா ஸ்டாலின், மாரிச்செல்வம், பழனிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...