×

அடுத்தடுத்து லாரிகள் மோதி விபத்து

நல்லம்பள்ளி, மார்ச் 16: குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து, ஹைட்ரஜன் பெராக்சைடு ஏற்றிய டேங்கர் லாரி, கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை குஜராத்தை சேர்ந்த ரமீஜ்(27) என்பவர் ஓட்டி வந்தார். நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, தாறுமாறாக ஓடி தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தஇ சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றி, வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர்.

அப்போது ஒரு வழி பாதையில் சென்று கொண்டிருந்த காற்றாலை இறக்கை ஏற்றிச்சென்ற லாரி மற்றும் கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. ஏற்கனவே, விபத்து நிகழ்ந்த நிலையில், ஒரு வழி பாதையிலும் விபத்து ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள், விபத்துக்குள்ளான 2 லாரிகளையும் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து, தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா