×

கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் நேரடி நெல் கொள்முதல் பணி விறுவிறுப்பு.

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் உள்ள கோவகுளம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் பணி விறுவிறுப்பு நடைபெற்று வருகிறது. வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் எப்போதும் ஆடி 18க்கு பின்னர் படிப்படியாக சம்பா சாகுபடியை தொடங்கி விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்வதில் விவசாயிகளிடம் ஆரம்பத்தில் சுணக்கம் ஏற்பட்டதால் சம்பா சாகுபடி காலதாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் பிறகு பெரும்பாலான விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 9ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். விவசாயிகள் சாகுபடி செய்த நெல்களை வாங்க வசதியாக கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் மேட்டுமகாதானபுரம், வீரராக்கியம், கட்டளை, கோவகுளம் ஆகிய நான்கு இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் நெல்களை கொண்டு வந்த பிறகு அங்கேயே பணியாளர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து நெல்களை கொள்முதல் செய்கின்றனர். நெல்கள் 17 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால் நெல்களை காயவைத்து ஈரப்பதத்தை குறைத்து வாங்குகின்றனர்.

கோவகுளத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணியில் கடந்த 15 நாட்களாக நடைபெற்று வருகிறது. கோவகுளம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட சம்பா சாகுபடி நெல் மூட்டைகளை ஆர்வத்துடன் அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த வண்ணம் உள்ளனர். இங்கு மோட்டாரகம் நெல் ஒரு மூட்டை (40-கிலோ) ரூ.846க்கும், சன்னரகம் ஒரு மூட்டை (40-கிலோ) ரூ.864க்கு என கொள்முதல் செய்யபடுவதாக பணியாளர்கள் தெரிவித்தனர். மேலும் கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக ஒரு வாரத்திற்குள் அனுப்படும் என தெரிகிறது. மேலும் தற்சமயம் அறுவடை பணிகள் முடியும் தருணத்தில் உள்ளது. அதேபோல் மேட்டுமகாதானபுரம், வீரராக்கியம், கட்டளை போன்ற அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் முடியும் தருணத்தில் உள்ளது.
தற்சமயம் கோவகுளம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 15 நாட்களில் சுமார் 6000 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவகுளம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யும் பணிகள் இன்னும் சுமார் 20 நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Krishnarayapuram ,
× RELATED போக்குவரத்திற்கு இடையூறாக கொடி கம்பம் நட்ட நாதக மீது வழக்கு பதிவு