×

மாவட்டத்தில் 10 நாட்களில் 346 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஊட்டி,ஏப்.19: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி மார்ச் மாதம் வரை கொரோனா பாதிப்பு குறைந்திருந்தது. இந்நிலையில் மார்ச் 2வது வாரத்தில் இருந்து கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மார்ச் முதல் வாரம் வரை 5 முதல் 10 பேர் மட்டும் பாதிக்கப்பட்டு வந்தனர். அதனை தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து தற்போது 45க்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 8ம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை 10 நாட்களில் 346 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக 16,17ம் தேதி ஆகிய இரு நாட்களில் மட்டும் 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் 203 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி நிலவரப்படி கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 39 ஆக இருந்தது. இம்மாதம் 1ம் தேதியன்று 138 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தின நிலவரப்படி நீலகிரியில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 308 ஆக அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 9,160 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,801 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தொற்று அதிகமுள்ள மாவட்டங்களுக்கு சென்று வருவது, முக கவசம் அணியாமல் நடமாடுவது, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நடமாடுவது போன்ற அரசு தெரிவிக்கும் வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காததே காரணம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. எனவே அரசு தெரிவித்துள்ள வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

Tags : Corona ,
× RELATED விருதுநகரில் மாஸ்க் இல்லாமல் வந்தால் கொரோனா டெஸ்ட் கட்டாயம்