×

கொரோனா தொற்று பரவல் காரணம் இலக்கு நிர்ணயித்து வியாபாரிகள், மக்களிடம் கட்டாய அபராத வசூல் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டனம்

பெரம்பலூர்,ஏப்.17: காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை இலக்கு நிர்ணயித்து கட்டாய வசூலிப்பால் வணிகர்களின் பாதிப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. பெரம்பலூர் மாவட்ட தலைநகரான பெரம்பலூர் நகராட்சி மற்றும் தாலுகா தலைநகரங்களில் தினமும் சுகாதாரத்துறை, காவல்துறை போட்டி போட்டுக்கொண்டு முகக்கவசம் அணியவில்லை, சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என அபராதங்கள் வசூலித்து வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் வேப்பந்தட்டையில் அடுத்தடுத்து சுகாதாரத்துறை, காவல்துறை வசூல் வேட்டையில் ஈடுபட்டதால் அப்பகுதி வணிகர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏகேவிஎஸ் சண்முகநாதன், மாவட்ட செயலாளர் சாமி இளங்கோவன், மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கொரோனா தொற்று உருமாற்றம் பெற்று, 2வது அலையாக, தமிழகத்தில் வேகமாக பரவி வருவதாக வெளியிடப்படும் அரசு அதிகாரிகளின் அறிவிப்பு, பொது மக்களுக்கும், வணிகர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதோடு, பேரிடர் கால சட்டங்கள் அமலாக்கத்தில் அரசும், அரசு அதிகாரிகளும் எடுத்துவரும் நடவடிக்கைகள், பொதுமக்களையும், வணிகர்களையும் பெருமளவு பாதித்து வருகின்றது. பல்வேறு துறை அரசு அதிகாரிகள், குறிப்பாக காவல்துறை, வருவாய்துறை நகராட்சி அதிகாரிகள் சுகாதாரத்துறை ஊழியர்கள், உ ணவு பாதுகாப்பு துறை என பலதரப்பட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மீதும் குறிப்பாக வணிகர்கள் மீது இலக்கு நிர்ணயித்து அபராதம் வசூலிப்பதும், தண்டனைக்கு உள்ளாக்குவதும் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல இருக்கின்றது.

ஏற்கனவே கொரோனா தொற்றுப்பாதிப்பினால் வணிக இழப்பிற்கும் வாழ்வாதார இழப்பிற்கும் ஆளாகியுள்ள வணிகர்கள் அரசு அதிகாரிகளின் அச்சுறுத்தல் மற்றும் கெடுபிடிகள் காரணமாகவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டாய வசூலிப்பு காரணமாகவும் மிகப்பெரும் பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று இலக்கு நிர்ணயித்து ஒவ்வொரு அரசுத்துறை அதிகாரியும் குறைந்தது நாளொன்றுக்கு 200 வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்று அறிவித்திருப்பதை உடனடியாக திரும்ப பெறுமாறு வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மருத்துவ வசதி, விழிப்புணர்வு இல்லாமல்...