×

ரேஷன் கடை வளாகத்தில் சாக்கடை கழிவு நீர்

ஈரோடு, ஏப். 13: ஈரோட்டில் ரேஷன் கடை வளாகத்தில் பாதாள சாக்கடை கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களுக்கு நோய் பரவு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி 48வது வார்டுக்குட்பட்ட கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அப்பகுதியில் உள்ள ஈரோடு மாவட்ட கூட்டுறவு சலவை சங்கத்தின் கட்டிடத்தில் இரண்டு ரேஷன் கடைகள் (நியாய விலை கடை) செயல்படுகிறது.

இந்த ரேஷன் கடையின் வளாகத்தில் மக்கள் பொருட்கள் வாங்க நிற்கும் பகுதியில், பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை முறையாக பராமரிப்பு செய்யாததால், கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அப்பகுதி முழுக்க கடுமையான துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால், ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வரும் மக்கள் கழிவு நீர் செல்லும் பாதையிலேயே நின்று பொருட்களை பெற்று செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்களும், ரேஷன் கடை ஊழியர்களும் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டினை வைத்துள்ளனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் இப்பிரச்னைக்கு உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...