×

கல்வி தொழில்முறை நிபுணர்களை உருவாக்குவதற்காக மட்டுமல்ல: ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பேச்சு

 

சென்னை: தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் நேற்று நடந்த ‘‘ஒற்றுமை, பண்பாட்டு பன்முகத்தன்மை மற்றும் தேசியக் கட்டமைப்பில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் பங்கு: விக்சித் பாரத் 2047” என்ற தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறி வரும் நிலையில், மாணவர்களை அறிவாற்றல் மிக்கவர்களாகவும், புதுமை சிந்தனையுடனும், சமூகப் பொறுப்புணர்வு கொண்டவர்களாகவும் உருவாக்குவதில் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் கல்வித் தரம், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, பரஸ்பர மரியாதை மற்றும் இந்தியாவின் வளமான பண்பாட்டு பன்முகத்தன்மையைப் பேணுவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.

தேசிய கல்விக் கொள்கை, பாரம்பரிய நாகரிக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு, உலகளாவிய தரநிலைகளையும் இணைக்கும் கல்விச் சூழலை உருவாக்கும். பல்துறை கல்வி, ஆராய்ச்சி, புதுமை, தொழில்முனைவு, திறன் மேம்பாடு மற்றும் இந்திய அறிவு மரபு ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்களை தன்னம்பிக்கையுள்ள தலைவர்களாகவும், பொறுப்புள்ள தேசக் கட்டமைப்பாளர்களாகவும் உருவாக்க முடியும். கல்வி என்பது வெறும் தொழில்முறை நிபுணர்களை உருவாக்குவதற்காக மட்டுமல்ல, நல்ல பண்புகள், அரசியலமைப்புச் சிந்தனைகள் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான உறுதியான அர்ப்பணிப்பு கொண்ட மனிதர்களை உருவாக்குவதே அதன் நோக்கமாக இருக்க வேண்டும்.

நாட்டின் வளர்ச்சி, சமூக ஒற்றுமை மற்றும் சேவை மனப்பான்மையை முன்னிறுத்தும் சிறந்த கல்வி நிறுவனங்களாக ஒவ்வொரு கல்வி நிறுவனமும் திகழ வேண்டும். வளர்ந்த, அனைவரையும் உள்ளடக்கிய, தற்சார்பு இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Governor ,R.V. Arlekar ,Chennai ,Tamil Nadu ,Rajendra Vishwanath Arlekar ,Unity, ,Cultural Diversity and Role of Minority ,in ,Building: Vikshit Bharat'' ,B.S. Abdur Rahman Crescent Institute ,of Science and Technology ,
× RELATED ஜிஎஸ்எம் டிரான்ஸ்மீட்டர் கருவி மூலம்...