பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே நேற்று நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதியதில் தம்பதி, 2 மகள்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். குல தெய்வ கோயிலுக்கு சென்று திரும்பிய போது இந்த கோர விபத்து நடந்துள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை எம்எல்ஏ வீதியை சேர்ந்தவர் கனகராஜ் (45).தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி பூரணி என்கின்ற உமா மகேஸ்வரி (39) இவர்களது மகள்கள் ஆர்த்தி (25) பிசியோதெரபிஸ்ட் படிப்பு முடித்து வேலைக்கு சென்று வந்தார். இளைய மகள் நர்மதா (20). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர்களது தூரத்து உறவினர் ராமன் (35). நேற்று இவர்கள் 5 பேரும் காரில் உடுமலை அருகே குல தெய்வ கோயிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.
சாமி தரிசனம் செய்து விட்டு மதியம் காரில் திரும்பி கொண்டு இருந்தனர். காரை கனகராஜ் ஓட்டினார். மதியம் 2 மணி அளவில் பொள்ளாச்சி, நல்லாம்பள்ளி அருகே வந்த போது நெடுஞ்சாலை சென்டர் மீடியன் பகுதியில் நடப்பட்டிருந்த மலர் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியின் மீது கார் மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே கனகராஜ், ராமன், பூரணி,ஆர்த்தி, நர்மதா ஆகிய 5 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் தம்பதி, 2 மகள்கள் மற்றும் உறவினர் உயிரிழந்த சம்பவம் மதுக்கரை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
