×

மேகதாது அணை, தண்ணீர் திறக்க மறுப்பு; எகிறி அடிக்கும் கர்நாடகா அடங்கி போகும் தமிழகம்: வறட்சியால் போராடும் விவசாயிகள்: மவுனம் காக்கும் முதல்வர் விஜய்

காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் எப்போதும் இல்லாத பின்னடைவை இப்போது சந்தித்துள்ளது தமிழ்நாடு. உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படியும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படியும் தமிழகத்தின் டெல்டா பாசனத்திற்கான நீரை திறந்து விடாமல் முரண்டு பிடித்துக் கொண்டே இருக்கிறது கர்நாடகம். இப்படி எகத்தாளமாய் செயல்படும் கர்நாடகம், அடாவடியாக அம்மாநிலத்தில் மேகதாது என்னுமிடத்தில் புதிய அணை கட்டவும் ஆயத்தமாகி வருகிறது.

ஏற்கனவே பாசனத் தேவைக்கு நீரின்றி தவிக்கும் நமது விவசாயிகள், மேகதாது அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகி விடும் என்று அபாய அறைகூவல் விடுத்து வருகின்றனர். அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, அவலம் தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வேளாண் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைத்து தலைவர்களின் வேண்டுகோளாக உள்ளது. ஆனால், இதற்குரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டிய தமிழக அரசும், முதல்வரும் வாய்மூடி மவுனம் சாதித்து அலட்சியம் காட்டுகின்றனர்.

இது விவசாயிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுஒரு புறமிருக்க, இப்போதைய தவெக அரசு, கடந்த கால அரசுகளின் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்ள நினைக்கும் போக்கையும் தொடர்ந்து வருகிறது. ஆனால், இந்த காவிரி நீர் பங்கீட்டு பிரச்னை என்பது ஒரு நூற்றாண்டு கடந்தது. திறமையான முதல்வர்களின் முந்தைய செயல்பாடுகள் தான், நமக்கு சட்டப்பூர்வமான இறுதி தீர்ப்பை பெற்று தந்துள்ளது.

இதை இன்றைய தவெக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்கின்றனர் நீர்வள மேம்பாட்டில் ஆர்வம் கொண்ட மூத்த விவசாயிகள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: காவிரி ஆற்றின் மொத்த நீரில் தமிழ்நாடு சுமார் 602 டிஎம்சி நீரை பயன்படுத்தியது. 20ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, கர்நாடகாவிற்கு 138 டிஎம்சி நீர் மட்டுமே கிடைத்தது. 1924ம் ஆண்டில் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில், காவிரி நீர் பயன்பாடு தொடர்பாக மதராஸ் மற்றும் மைசூர் மாகாணங்களுக்கு இடையே 50 ஆண்டுகால ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி 1974ம் ஆண்டிற்கு பிறகு காவிரிநீர் பங்கீடு குறித்து மீண்டும் பேசலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே கர்நாடகம், காவிரிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகளை தொடங்கியது. 1968ம் ஆண்டில் அங்கு ஹேமாவதி மற்றும் ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டது. அப்போது தமிழகத்தின் முதல்வராக அண்ணா இருந்தார். பொதுப்பணித்துறை அமைச்சராக முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்தார். மாதவன் சட்ட அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

அன்றைய காலகட்டத்தில் கர்நாடகத்தின் முதல்வராகவும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் வீரேந்திரபாட்டீல் இருந்தார். காவிரிநீர் பங்கீடு தொடர்பாக இவர்கள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கே.எல்.ராவ் தலைமையில் நடந்தது. 1968 ஆகஸ்ட் 19, 20 என்று இரண்டு தினங்கள் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை. 1969ல் அண்ணா மறைந்த பிறகும், முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. மீண்டும் 1970ல் 4 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தது.

இந்த பேச்சுவார்த்தைகள் எதிலும் சுமுகத்தீர்வு எட்டப்படவில்லை. இப்படி தீர்வுகள் எட்டப்படாத நிலையில் அன்றைய திமுக அரசு, ஒரு தீர்ப்பாயத்தை நாம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தது. 1971ம் ஆண்டு ஜூலை 8ம்தேதி, காவிரி பிரச்னைக்கு ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது. அனைத்து கட்சிகளும் கூடி இதை நிறைவேற்றியது. அப்படி அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தின் தீர்ப்பு தான், இதுவரை நமக்கு கை கொடுக்கிறது என்பதும் இங்கே குறிப்பிட வேண்டியதாகும்.

இந்த தீர்மானம் அப்போதைய ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தீர்மானத்தை அவர்கள் ஏற்றுக்ெகாள்ள மாட்டார்கள் என்று கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றத்தை உடனடியாக அமைக்க உத்தரவிட வேண்டும் என்பதே அந்த வழக்காகும். இந்தச்சூழலில் 1972ம் ஆண்டு மே மாதம் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி தமிழ்நாட்டிற்கு வந்தார். ‘‘இப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

எனவே இந்த பிரச்னை குறித்து இருமாநில முதல்வர்களும் பேசி தீர்வு காணலாமே?’’ என்ற ஆலோசனையை அவர் வழங்கினார். ஆனால், நீதிமன்ற வழக்கு, பேச்சுவார்த்தைக்கு தடையாக இருக்கும் என்றார். இதையடுத்து அனைத்து கட்சிகளிடமும் ஆலோசனை கேட்டு வழக்ைக திரும்ப பெற்றார் முதல்வர் கருணாநிதி. ஆனால், காவிரி நடுவர் மன்றம் அமைக்காவிட்டால் மீண்டும் வழக்கு தொடர்வோம் என்பது தமிழகத்தின் முக்கிய நிபந்தனையாக இருந்தது.

அதன் பிறகு எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்தது. அவரது ஆட்சியில் காவிரிநீர் பங்கீடு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 13 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சி அமைந்து கருணாநிதி மீண்டும் முதல்வரானார். வி.பி.சிங் பிரதமராக இருந்த அன்றைய காலக்கட்டத்தில் மீண்டும் திமுக அரசின் நடவடிக்கையால் 1990ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு விசாரணைகள், சட்ட போராட்டங்களுக்கு பிறகு 17 ஆண்டுகள் கழித்து 2007ம் ஆண்டில் காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்திற்கு ஆண்டு தோறும் 199 டிஎம்சி தண்ணீரை, கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடகம் உச்சநீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து தமிழ்நாடு அரசும் நீரின் தேவை குறித்தும், வேளாண் பாதுகாப்பு குறித்தும் ஆதாரங்களை முன்வைத்து சட்டப்பூர்வமாக வாதிட்டது.

இதன் தொடர்ச்சியாக காவிரிநீர் பங்கீடு குறித்து 2018ம் ஆண்டு, உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்த தீர்ப்பு தான், தமிழ்நாட்டிற்கு நீதியை கொடுத்தது. அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தமிழகத்திற்கு கர்நாடகம் ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி நீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இந்த நீர்பங்கீடு என்பது முறையாக நடக்கிறதா? என்பதை கண்காணிப்பதற்கு 2018ம் ஆண்டில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையமும் ஆண்டுதோறும் கூடி, தமிழகத்திற்கான நீரை திறந்துவிடும்படி அறிவுறுத்தி வருகிறது. இப்படி அனைத்தும் சட்டப்பூர்வமாகவும், நேர்மையாகவும் நடந்துள்ள நிலையில் தொடர்ந்து கர்நாடகம், தமிழகத்திற்கான தண்ணீரை திறப்பதற்கு மறுத்து வருகிறது. இதனால் ஆண்டுதோறும் தமிழகத்தின் டெல்டா பாசனம் என்பது ெபரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் கர்நாடக அரசு, காவிரி பாய்ந்து வரும் ராமநகரா மாவட்டம் கனகபுரா தாலுகாவில் மேகதாது என்னுமிடத்தில் ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்டி நீரை தேக்க முடிவு செய்துள்ளது. இதனால் பெருமழைக்காலங்களில் காவிரி உபரிநீர் கூட, மேட்டூர் அணைக்கு வர முடியாத நிலையே உருவாகும். இதனால் தமிழகத்தின் டெல்டா பாசனம் பாலைவனமாகும். இதை கருத்தில் கொண்டு காவிரியில் நமக்கான நீரை பெறுவதும், மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுப்பதும் தமிழகத்தின் தலையாய கடமையாக மாறியுள்ளது.

ஆனால், இதற்காக வீரியத்துடன் போராட வேண்டிய முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, உறுதியான எந்த நிலைப்பாட்டையும் எடுக்காமல் தொடர்ந்து வாய்மூடி மவுனம் சாதித்து வருகிறது. தமிழகத்தின் உணர்வுப்பூர்வமான வாழ்வாதார பிரச்னையில் அரசின் ஆமைவேக செயல்பாடுகளும், முதல்வரின் மவுனமும் அபத்தமானது. இது விவசாயிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேகதாது விவகாரத்திலும், தண்ணீர் திறப்பு விவகாரத்திலும் கர்நாடகா அரசு அவர்களுக்கு சாதகமாக எகிறி அடிக்கும் நிலையில், தமிழக அரசு எந்த பதிலடியும் கொடுக்காமலும், தண்ணீரை பெற்று தராமலும் அடங்கி போகிறது. இதனால் தமிழகத்தில் தண்ணீரின்றி காவிரி ஆறு வறண்டு கிடப்பதால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்னைகளுக்கு விளக்கமளிக்க வேண்டிய முதல்வர் விஜய் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

இதற்கு பதில் சொல்ல வேண்டிய நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிகையாளர்களை கண்டாலே தெறித்து ஓடுகிறார். மேகதாது அணை மற்றும் தண்ணீர் திறப்பு குறித்து முடிவெடுக்க கர்நாடகா காங்கிரஸ் அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள தவெக அரசுக்கு இந்த விவகாரத்தில் அனுபவம் இல்லை. இதனால், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியமில்லை என்கிறார்.

* வாரியம் அமைக்க சொன்னால் ஆணையம் அமைத்த ஒன்றிய அரசு
காவிரி நீர்பங்கீடு குறித்த இறுதி தீர்ப்பில் காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இது அதிகாரத்தோடு டெக்னிக்கல் ஸ்கீம் சார்ந்தும் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஆனால், பாஜ அரசு, டெக்னிக்கல் என்பதற்கான அர்த்தம் எங்களுக்கு தெரியவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மழுப்பலாக வாதிட்டது.

இதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பிறகு, பாஜ காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது. ஆணையம் என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்தது. வாரியத்திற்கான நிர்வாக அதிகாரம் இதற்கு இல்லை. இந்தவகையிலும் வாரியத்திற்கு பதில், ஆணையம் அமைத்து தமிழகத்திற்கு துரோகம் செய்தது ஒன்றிய பாஜ அரசு என்கின்றனர் சட்டநிபுணர்கள்.

* எந்த விதத்திலும் ஏற்கவே முடியாது
‘‘கபினி, கேஆர்எஸ் அணைகளில் திறக்கப்படும் நீரை சேமித்து, தங்கள் மாநில பாசனப்பகுதிகளுக்கு திருப்ப, கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. 40 டிஎம்சி நீரை சேமிக்கும் கொள்ளளவு கொண்ட, மேகதாது அணை மூலம் 400 மெகாவாட் மின்உற்பத்திக்கு திட்டமிட்டு, அதற்கான நீர்மின் நிலையமும் அமைக்க முடிவு செய்துள்ளது.

மேலும் மேகதாது அணைநீரை கர்நாடகத்தின் பாசனத்திற்கு பயன்படுத்துவதற்காக சுற்றுப்புறங்களில் உள்ள மைசூர், சாம்ராஜ்நகர், தும்கூர் மாவட்டங்களில் ரூ.1,885 கோடியில் 490 ஏரி, குளங்களை சீரமைத்து கூடுதல் நீரை சேமிக்கவும் திட்டமிட்டுள்ளது. இத்தகைய சூழலில் இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கான தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்கும் என்ற வாதத்தை கர்நாடகம் வைக்கிறது. இதை எந்த விதத்திலும் ஏற்கவே முடியாது,’’ என்பதும் மூத்த விவசாயிகளின் கூற்று.

* ராசிமணலில் அணை யோசிக்குமா தமிழகம்?
கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் ஒகேனக்கல்லுக்கு அருகில் இருக்கும் இடம் ராசிமணல். காவிரிநீர் அளவிடப்படும் பிலிகுண்டுலுவில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் ராசிமணல் அமைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் உபரிநீரை தேக்கி வைக்கவும், மின்சாரம் தயாரிக்கவும் சாத்தியமான இடமாக இது இருக்கும் என்று முன்னாள் முதல்வர் காமராஜர் முடிவு செய்தார்.

1961ம் ஆண்டில் இதற்காக அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு பல்வேறு அரசியல் சூழல்களால் இந்த திட்டம் முடங்கியது. தற்போதும் இங்கு தமிழகம் அணைகட்டினால் 100 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும். எனவே இது குறித்தும் தமிழக அரசு யோசிக்க வேண்டும் என்கின்றனர் பொறியியல் துறை முன்னோடிகள்.

* காங்கிரஸ்-பாஜ இரட்டை வேடம்
காவிரி மேலாண்மை ஆணைய இறுதி தீர்ப்பில், இனிமேல் காவிரியின் குறுக்கே எந்த மாநில அரசும் அணை கட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. அப்படி இருந்தும் கடந்த முறை அங்கு எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி அமைந்த நேரத்தில் அங்கு மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் அதிரடியாக எடுக்கப்பட்டது. பின்னர் தற்போது சித்தராமையா, சிவக்குமார் ஆகியோர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலும் நீடிக்கிறது.

சமீபத்தில் ஒன்றிய துணை அமைச்சர் ஒருவர், காவிரியில் மேகதாது அணை கட்ட, தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று கொளுத்தி போட்டார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இதில் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த வகையில் இந்த விவகாரத்தில் பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகள், அரசியல் ஆதாயத்திற்காக இரட்டை வேடம் போட்டு இருமாநிலங்களிலும் காய்நகர்த்தி வருகிறது என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

* வனப்பகுதிகளில் மறுவரையறை அவசியம்
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘‘மேகதாது என்னும் இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தையும் கர்நாடக அரசு முடித்து விட்டது. தற்போது அணை கட்டப்படும் வனப்பகுதி முழுவதும் ஒரு காலத்தில் தமிழகத்தில் இருந்தது. எனவே மறுஎல்லை வரையறை செய்து அந்த பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பதற்கு ஜனாதிபதியிடம் தமிழக அரசு கோரிக்கை வைக்க வேண்டும்.

அதற்கு முன்பாக அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு, உடனடியாக தடையாணை பெற வேண்டும். இது போன்ற நடவடிக்கையால் மட்டுமே எதிர்வரும் காலங்களில் காவிரி மீதான தமிழகத்தின் உரிமையை நிலை நிறுத்த முடியும்,’’ என்றனர்.

* உபரிநீரை கணக்கு காட்டும் கர்நாடகா
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் காவிரியாறு, கர்நாடகாவில் 320 கிலோ மீட்டர், தமிழக-கர்நாடக எல்லையில் 64 கிலோ மீட்டர், தமிழகத்தில் 416 கிலோ மீட்டர் பாய்ந்து கடலில் கலக்கிறது. கர்நாடகாவில் காவிரியின் துணையாறுகளின் குறுக்கே கபினி, கேஆர்எஸ், ஹேமாவதி, ஹேரங்கி உள்ளிட்ட பெரிய அணைகளும், ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய அணைகளும் கட்டப்பட்டுள்ளது. இந்த அணைகளில் குறைந்தபட்சம் 120 டிஎம்சி நீர் சேமிக்க முடியும்.

காவிரி நீர் பங்கீடு குறித்த உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி ஆண்டுதோறும் கர்நாடகம், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால், இதுவரை கர்நாடகம் தமிழகத்திற்கு உரியகாலத்தில் தண்ணீர் திறந்துவிடவில்லை. கடந்த சில ஆண்டுகளாக பெருமழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது, அங்குள்ள அணைகளின் பாதுகாப்பு கருதியே நீரை திறந்து விடுகின்றனர். அதையே கணக்காக காட்டி வருகிறது கர்நாடகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* டெல்டா விவசாயம் கேள்விக்குறி
‘‘காவிரி நீரால் தமிழகத்தின் 12 டெல்டா மாவட்டங்களில் 16.40 லட்சம் ஹெக்ேடர் பரப்பளவு பாசனவசதி பெறுகிறது. டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையை பொறுத்து, தண்ணீர் தேவை குறையும். இதன் மூலம் 34.20 லட்சம் டன், நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு மட்டும் 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும்.

இதேபோல் 20 மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதும் மேட்டூர் அணைக்கு வரும் நீர் தான், கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் தினமும் ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும். இவ்வாறு ஆண்டு முழுவதும் திறக்க, குறைந்த பட்சம் 30 டிஎம்சி தண்ணீர் தேவை. ஆனால், தண்ணீர் திறப்பு இல்லாததால் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது,’’ என்கின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.

Tags : Mekedatu Dam ,Karnataka ,Tamil ,Nadu ,Chief Minister ,Vijay ,Tamil Nadu ,Cauvery ,Supreme Court ,Cauvery Management Commission ,
× RELATED பதிவாளர் நியமனத்துக்கு ரூ.50 லட்சம் லஞ்சமா? பதிலளிக்காமல் அமைச்சர் ஓட்டம்