மும்பை: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ஆடை விலகியதாக இணையத்தில் வெளியான வீடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் போலியாக எடிட் செய்யப்பட்டது என பாடகர் சோனு துக்ரால் போலீசில் புகார் அளித்துள்ளார். பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிப்பில், ‘ஜுக்னி’ என்ற ஆல்பம் பாடல் வெளியானது. இந்த பாடலின் வீடியோவில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஆடை விலகல் அசவுகரியம் நடந்ததாகக் கூறி, அந்த குறிப்பிட்ட காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரலான அந்த காட்சியைத் தொடர்ந்து, பாடலின் தயாரிப்பாளர்கள் உடனடியாக வீடியோவில் இருந்த குறிப்பிட்ட பகுதியை மங்கலாக்கி வெளியிட்டனர்.
ஆனால், பின்னர் மீண்டும் அந்த காட்சியை பழையபடியே மாற்றியதால், இணையவாசிகளிடையே இந்த பிரச்னை மேலும் தீவிரமடைந்தது. இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு புதிய திருப்பமாக பாடகர் சோனு துக்ரால் போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எனது ஜுக்னி பாடலின் வீடியோ காட்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) மூலம் போலியாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு எடிட் செய்யப்பட்ட வீடியோவே இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரைவில் விரிவாக பகிரங்கமாக பேசுவேன்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸோ அல்லது பாடல் தயாரிப்பாளர்களோ இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
