வாரணாசி: அயோத்தி ராமர் கோயில் உண்டியல் காணிக்கை முறைகேட்டை கண்டித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் நூதன போராட்டம் நடத்தினர். ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தினர். காவி உடை அணிந்து சாமியார் வேடத்தில் வந்த சுயேச்சை எம்பி பப்பு யாதவ், உண்டியலை வைத்து பணம் வசூலிப்பது போலவும், பிறகு அவற்றை எடுத்து கொண்டு ஓடுவது போலவும் நாடகம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக பீகாரை சேர்ந்த எம்பி பப்பு யாதவ் மீது வாரணாசி கோட்வாலி போலீஸ் நிலையத்தில் நேற்று எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாரணாசி போலீஸ் துணை ஆணையர் கவுரவ் பன்ஸ்வால், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பப்பு யாதவ், அயோத்தி தொகுதி எம்பி அவதேஷ் பிரசாத் ஆகியோர் நாடாளுமன்றத்தில் மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம்சாட்டி துறவிகள் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அதே போல், ராகுல் காந்தி, பப்பு யாதவ் மற்றும் அவதேஷ் பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி பாஜ எம்பி பன்சூரி ஸ்வராஜ் தலைமையில் பாஜவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
