கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் +110 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் லவ்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். லவ்பிரீத் ஸ்நேட்ச் முறையில் 176 கிலோ மற்றும் கிளீன் மற்றும் ஜெர்க் முறையில் 212 கிலோ என மொத்தம் 388 கிலோ எடை தூக்கி 2வது இடம் பிடித்தார். தங்கப் பதக்கம் வென்ற நியூசிலாந்தின் டேவிட் ஆண்ட்ரூ லிட்டியை விட லவ்பிரீத் வெறும் 1 கிலோ மட்டுமே குறைவாகத் தூக்கியது குறிப்பிடத்தக்கது.
டேவிட் 389 கிலோ தூக்கி (166 கி. + 223 கி.) முதலிடம் பிடித்த நிலையில், இங்கிலாந்தின் ஆண்ட்ரூ கிரிபித் 356 கிலோ தூக்கி (165 கி. + 191 கி.) வெண்கலப் பதக்கம் பெற்றார். பாஞ்சாப் மாநிலம் பால் சிக்கந்தர் கிராமத்தை சேர்ந்த லவ்பிரீத் சிங் (28 வயது) 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார். இம்முறை வெள்ளி வென்றது குறித்து அவர் கூறுகையில், ‘ஸ்நேட்ச் முறையில் சிறப்பாக செயல்பட்டதும் தங்கம் வெல்வேன் என்று நினைத்தேன்.
எல்லாம் அவன் செயல், கிளீன் மற்றும் ஜெர்க் கடைசி முயற்சியில் தூக்க முடியாமல் போனது சற்று ஏமாற்றமாக இருந்தது. பயிற்சியின்போது இதை விட அதிக எடை தூக்கியிருக்கிறேன்’ என்றார். இவரது தந்தை டெய்லராகவும், தாத்தா காய்கறி வியாபாரமும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. சாதாரண பின்னணியில் இருந்து வந்தாலும், 13 வயதில் பளுதூக்குதல் பயிற்சியை தொடங்கிய லவ்பிரீத் இன்று காமன்வெல்த் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார்.
