×

தலைமை தேர்தல் ஆணையர் நியமன குழுவில் இருப்பதால் பிரதமர் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவார் என்று கூறமுடியாது:உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம்: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

 

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் நியமன குழுவில் இருப்பதால் பிரதமர் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவார் என்று கூறமுடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறை குழுவில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு மாற்றாக ஒன்றிய அமைச்சர் இடம்பெறும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றம் முன்னதாக வழங்கிய உத்தரவை மீரும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் எஸ்.சி.சர்மா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது,’ தேர்தல் கமிஷனர்கள் தேர்வு நடைமுறையில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களுக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மை இருப்பதால், அவர்கள் தீய நோக்கத்துடனும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் செயல்படுவார்கள் என்று கருதுவது தவறானது. பிரதமர் பதவிக்கு ஒரு புனிதத்தன்மை உள்ளது.

தேர்வு குழுவின் முடிவைச் சந்தேகிக்கக் கூடாது. அத்தகைய சந்தேகம், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மீதான அரசியலமைப்பு ரீதியான நம்பிக்கையை சிதைக்கும். பிரதமரின் முடிவை நம்பாமல், அது கட்டாயம் தீய நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கருதினால், அமைச்சரவையைத் தேர்ந்தெடுக்கும்போதுகூட முன்னாள் நீதிபதி அல்லது வெளியாட்கள் ஒருவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வர மாட்டார்கள்? மக்களுக்கு நேரடியாகப் பொறுப்புக்கூற வேண்டிய அமைப்புகள் நிர்வாகத் துறையும் சட்டமன்றமும் மட்டுமே’ என்றார்.

அப்போது நீதிபதிகள்,’ இப்போது எத்தனை மாநிலங்களில் அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளன என்பதற்கான புள்ளிவிவரங்களை மட்டும் எங்களிடம் தாருங்கள். அதற்காக பிரதமர் மீது அவநம்பிக்கை கொள்வது குறித்த விவகாரம் இதுவல்ல. நாங்கள் பிரதமர் மீது நம்பிக்கை வைப்போம். ஆனால், கடந்த காலங்களில் இது நடக்கவில்லை. அதோடு நான் இதை நிறுத்திக்கொள்கிறேன்’ என்றனர்.

உடனே துஷார் மேத்தா,’ அரசியலமைப்பு விளக்கத்தில் சட்டத்தின் முக்கியக் கேள்வி அடங்கியுள்ளதால், இந்த விவகாரத்தை அரசியலமைப்பின் 145(3)-வது பிரிவின் கீழ் பெரிய அமர்வுக்கு மாற்ற வேண்டும்’ என்று கூறினார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் பெரிய அமர்வுக்கு பரிந்துரைப்பதா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவெடுக்க வேண்டியுள்ளது. எனவே வழக்கின் தீர்ப்பை ஒத்திவைக்கிறோம். அனைத்து தரப்பும் இதுதொடர்பான கூடுதல் எழுத்துப்பூர்வ வாதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

* நீதிபதிகள், நீதிபதிகளை தேர்வு செய்கிறார்களா?

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில்,’ தேர்வுக் குழு போதுமானதாக இல்லை என்று நீதிமன்றம் கூறும்போதே, நாடாளுமன்றத்தின் விவேகம் சந்தேகிக்கப்படுகிறது. அரசியலமைப்பு நம்பிக்கை கோட்பாடு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. மற்றொரு அமைப்பின் தேர்வில் நிர்வாகத் துறை பங்கேற்க விரும்பும்போது, ​​அது அந்த அமைப்பின் சுதந்திரம் குறித்த கேள்வியாக மாறுகிறது.

அப்போது நீதித்துறையிடம், வெளியாட்கள் யாரும் இல்லாததால் உங்கள் நியமனங்களை நாங்கள் நம்பமாட்டோம் என்று சொல்ல முடியுமா? இது ஒரு மோதல் போக்குடைய விவாதம் அல்ல. சட்ட மாணவனாகவே நான் இதைச் சொல்கிறேன்’ என்றார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி தீபங்கர் தத்தா,’ நீதிபதிகள் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று நீங்கள் கூறினீர்கள். ஆனால் இக்காலத்தில் நீதிபதிகள் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்களா என்பது எங்களுக்குச் சந்தேகமாகவே உள்ளது’ என்று குறிப்பிட்டார்.

* தேர்வுக்குழுவின் நியாயத்தன்மை நிரூபிக்கப்பட வேண்டும்

நீதிபதிகள் கூறும்போது, ‘தேர்தல் கமிஷனர்கள் தேர்வுக்குழு இப்போது நிலைமை 2:1 என்ற விகிதத்தில் உள்ளது. இருவர் பிரதமரின் தரப்பிலும், ஒருவர் எதிர்க்கட்சியின் தரப்பிலும் உள்ளனர். தேர்தல் ஆணையர் ஒரு சுதந்திரமான நபராக இருக்க வேண்டும். அந்தத் தேர்வுக் குழுவின் செயல்பாட்டில் நியாயத்தன்மை வெளிப்பட வேண்டாமா? நியாயத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் அது நிரூபிக்கப்பட வேண்டும்’ என்றனர்.

Tags : Chief Election Commissioner ,Union government ,Supreme Court ,New Delhi ,Election Commission of India ,
× RELATED டெல்லியில் நீட் எதிர்ப்பு...