×

வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள ஒரு மலை கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் சடலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு பணியாற்றும் ஊழியர் கண்ணன், இறந்த வாலிபரின் உறவினர்களிடம் ‘பிரேத பிரசோதனை செய்ய தேவையான பொருட்களை வாங்க வேண்டும். அதற்கு ரூ.2 ஆயிரம் செலவாகும். எனவே பணத்தை கொடுத்தால் விரைவாக பிரேத பரிசோதனை செய்ய முடியும்’ என்று கூறியுள்ளார்.

அதன்படி உறவினர்கள், ஊழியர் கண்ணனிடம் ரூ.2 ஆயிரத்தை கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கிய பிறகுதான் பிரேத பரிசோதனை செய்யும் பணியை தொடங்கியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரணை நடத்தி, ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் லீலாஅலெக்ஸ் உத்தரவிட்டார். அதன்படி நடந்த விசாரணை குறித்த அறிக்கையின்பேரில் லஞ்சம் வாங்கிய அரசு மருத்துவமனை ஊழியர் கண்ணனை சஸ்பெண்ட் செய்து மருத்துவமனை டீன் ரோகிணிதேவி இன்று காலை உத்தரவிட்டார்.

Tags : Vellore Government Hospital ,Vellore ,Odugathur ,Vellore Government Medical College Hospital ,
× RELATED பழனி தண்டாயுதபாணி கோவில் நில மோசடி...