சென்னை: மெரினா லூப் சாலையில் உள்ள மீன் அங்காடியால் எந்த பயனும் இல்லை என கூறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ பெண்கள், அமைச்சர் வெங்கடரமணனுடன் கடும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மெரினா கடற்கரையையொட்டிய நொச்சிக்குப்பம் லூப் சாலையில், முதல்வர் விஜய்யின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கங்கா பவானி அம்மன் கோயில் அருகே மீனவர்கள், மீன் வியாபாரிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு மீனவ அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் என பலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பல தலைமுறைகளாக கடலை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் எந்தவிதமான திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தக்கூடாது என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மாநகராட்சி சார்பில் கடந்த ஆண்டு பிரமாண்டமாக மீன் அங்காடி கட்டிக்கொடுக்கப்பட்டது. 2 ஏக்கர் பரப்பளவிலான அந்த இடத்தில் 50,000 சதுர அடியில் 360 கடைகள் கட்டப்பட்டுள்ளன. பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடமும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. மீன்களை வெட்டுவதற்கு தனி இடம் மற்றும் குடிநீர், கழிப்பிட வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. மெரினா லூப் சாலையில் அமைக்கப்படுள்ள இந்த மீன் அங்காடியால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் எந்த பயனும் இல்லை என்றும் மீனவர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். மீன் அங்காடி எங்களுக்கு வேண்டாம் என்றும் நாங்கள் கடற்கரை மணற்பரப்பிலேயே மீன் கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நவீன மீன் அங்காடியில் விற்பனை போதிய அளவில் நடப்பதில்லை. அதனால் நாங்கள் சாலையோரம் கடைகள் அமைத்து மீன் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது. இதை வலியுறுத்தி நேற்று மீன்வர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும், மீன் அங்காடியை இடித்து விட்டு அங்கு திருமண மண்டபம் கட்டித்தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் குலுக்கல் முறையில் மீனவர்களுக்கு மீன் அங்காடியில் கடைகள் ஒதுக்கப்படும் என மீனவளத்துறை சார்பில் கணக்கெடுப்பு பட்டியல் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் போராட்டம் தீவிரமாகிக் கொண்டிருந்த நேரத்தில், யாரும் எதிர்பாராதவிதமாக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரும், மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவுமான வெங்கடரமணன் போராட்ட களத்திற்கு நேரில் வந்தார். அவருடன் திருவொற்றியூர் எம்எல்ஏ செந்தில்குமார் உடனிருந்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவப் பெண்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும் அங்கு சமுதாய கூடம் அமைத்து தரவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், ‘அப்படி எல்லாம் செய்து தர முடியாது,’ என கூறினார். அமைச்சரின் இந்த பதிலால் அதிருப்தியடைந்த மீனவப் பெண்கள், அமைச்சரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இதனால், அமைச்சருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவப் பெண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் தங்களது கருத்துகளை ஆவேசமாக முன்வைத்ததால், போராட்டக் களத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. நிலைமை மேலும் பதற்றமடையாமல் இருக்க, உடனிருந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், மீனவ மக்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்ததால், அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நீடித்தது. பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் வெங்கடரமணன் கூறியதாவது: சமூக நலக்கூடத்தை வேறு இடத்தில் கட்டிக்கொள்ளலாம். மீன் அங்காடியில் உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டு, உங்களது வருவாயைப் பெருக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றார்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அமைச்சருடன் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜ முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் நேரில் வந்து மீனவர்களைச் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
