- உயர் நீதிமன்றம்
- அஇஅதிமுக
- முன்னாள் அமைச்சர்
- உதயகுமார்
- மதுரை
- ஆர்.பி. உதயகுமார்
- விஜய் அரசு
- அமைச்சர்
- கர்நாடக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- டெல்டா மாவட்டம்
மதுரை: ஐகோர்ட் கிளையின் தீர்ப்பு விஜய் அரசின் உச்சந்தலையில் ஆணி அடித்திருக்கிறது என மாஜி அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகா தராததால், பயிர்கள் காய்ந்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிப்பதற்கு தவெக அரசு என்ன போர்க்கால நடவடிக்கை எடுத்திருக்கிறது?
மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லையென ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சர் பார்லிமெண்டில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய தவெக அரசின் உத்தரவை ரத்து செய்து, ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தன்னை பார்க்க வந்தவர்கள் இறந்து போனார்கள் என்பதற்காக அரசு நிர்வாகத்தை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம் என்கிற கோமாளித்தனத்திற்கு, தலையில் குட்டு வைத்து, சட்டத்தை புரிய வைத்து, சட்டத்தின் ஆட்சிதான் என்றைக்கும் மேலோங்கி இருக்கும் என்பதை நீதியரசர்கள் இந்நாட்டிற்கு உணர்த்தியுள்ளனர்.
அரசு வேலைக்காக கோடிக்கணக்கானோர் காத்திருக்கும் அடிப்படை அறிவு கூட இல்லாத இக்கோமாளிக் கூட்டத்தை வைத்து, நாம் எப்படி மேகதாது பிரச்னையை சரி செய்ய போகிறோம்? காவிரி உரிமையை, பெண்கள் பாதுகாப்பை எப்படி காப்பாற்ற போகிறோம்? சட்டம், ஒழுங்கு சீரழிவை தடுக்கப் போகிறோம்? போதைப்பொருள் நடமாட்டத்தை நிறுத்தப் போகிறோம்? எங்களுக்கு ஸாரி வேண்டாம், நீதி தான் வேண்டும் என்று லாக்கப் டெத்துக்கு போர்க்குரல் எழுப்பிய முதல்வர் விஜய், இப்போது எங்கே இருக்கிறார்? விஜய் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கிறது.
கோமாளி கூட்டத்திடம் கோட்டையை ஒப்படைத்ததால், கோட்டையிலே ஓட்டை விழுந்துள்ளது. இன்றைக்கு ஐகோர்ட் மதுரை கிளையின் தீர்ப்பு உச்சந்தலையில் ஆணி அடித்திருக்கிறது. மக்களின், சட்டத்தின், நியாயத்தின், தர்மத்தின் பக்கம் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டுமே தவிர, தவெக கட்சியை வளர்க்க அரசு இயந்திரத்தை பயன்படுத்தினால் இப்படித்தான் சம்மட்டி அடி கிடைக்கும் என்பதற்கு நீதியரசர்களின் தீர்ப்பே சாட்சி. மக்களுக்கு ஒண்ணுன்னா, விஜய் கேள்வி கேட்பார் என்றாரே? இப்போது எங்கே போனார்? அவரை தேடி கண்டுபிடித்து தருபவருக்கு பம்பர் பரிசு அறிவிக்கலாமா? இவ்வாறு பேசியுள்ளார்.
