சென்னை: விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தலைமைச் செயலகம் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்னர். அவர்கள் போராட்டம் இரவு வரை நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தவெக தேர்தல் அறிக்கையின்படி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், சென்னை தலைமைச் செயலகம் முன் நேற்று மாலை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நிருபர்களிடம் அய்யாக்கண்ணு கூறியதாவது: 2022ம் ஆண்டு முதல் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து நிதி நிறுவனங்களிலும் பெற்றுள்ள விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்காத கர்நாடக அரசு மீது தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, ரூ.1 லட்சம் கோடி நஷ்டஈடு பெற்று அதை தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை முதலமைச்சரிடம் நேரடியாக எடுத்துரைப்பதற்காக இன்று காலை அவரை சந்திக்க வந்தோம். ஆனால், டிஜிபி சார்பில் முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறி, எங்களை வீட்டு சிறையில் வைத்தனர்.
அதன் பின்னரும் இதுவரை முதலமைச்சரை சந்திக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. இதனால் வேறு வழியின்றி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில் விவ சாயிகளின் போராட்டம் நள்ளிரவிலும் நீடித்தது. தலைமை செயலகம் முன் உள்ள பூங்காவிலேயே அவர்கள் படுத்துக் கிடந்தனர். இன்று காலை முதல்வர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
