×

மதுவின் சமூக தீமைகளை குறைப்போம் என்று கூறிவிட்டு டாஸ்மாக் பார்களை விரிவுபடுத்துவதா? ஜவாஹிருல்லா கேள்வி

 

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் கடைகளுடன் இணைந்தே செயல்பட வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி, இனி மதுபானக் கடைகளிலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் எங்கும் டாஸ்மாக் பார்களை (குடிப்பகங்களை) அமைக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. தேர்தல் காலங்களில் மதுவின் சமூகத் தீமைகளைக் குறைப்போம், படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம், மக்களின் நலனே அரசின் முன்னுரிமை என்று உறுதியளித்த தவெக இன்று ஆட்சிக்கு வந்ததும் மதுபான விற்பனையை மேலும் எளிதாக்கும் வகையில் புதிய குடிப்பகங்களை அமைக்க வழிவகுப்பது அதன் வாக்குறுதிகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது.

மக்களின் உடல்நலம், பெண்களின் பாதுகாப்பு, குடும்பங்களின் நலன் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டிய அரசு, மதுபான விற்பனையை விரிவுபடுத்தும் கொள்கைகளை முன்னெடுப்பது சமூகப் பொறுப்பிற்கு ஏற்புடையதல்ல. எனவே, டாஸ்மாக் குடிப்பகங்களை 100 மீட்டர் சுற்றளவிற்குள் அமைக்க அனுமதிக்கும் இந்த அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tasmac ,Jawahirullah ,Chennai ,Manithanaya Makkal ,Katchi ,M.H. Jawahirullah ,Tamil Nadu… ,
× RELATED ஆசிரியர்களின் மனுக்களுக்கு 5 நாட்களில் தீர்வு