×

பழநி ரூ.100 கோடி நில முறைகேடு விவகாரம் மின் வாரிய ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ​பழநி கோயிலுக்கு சொந்தமான, ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள், பழநி பத்திரப்பதிவு அலுவலகம் சென்று பல்வேறு ஆவணங்களை சேகரித்துள்ளனர். வழக்கில் தொடர்புடையவர்கள் வீடுகளில் சோதனை செய்துள்ளனர்.

விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் தாசில்தார் பிரசன்னா, தற்போதைய தாசில்தார் சஞ்சய் காந்தி மற்றும் நில அளவையர் செல்லதுரை ஆகிய வருவாய்த்துறை அலுவலர்கள், முறைகேடாக பதிவு செய்யப்பட்ட நிலத்தின் பல்வேறு காலகட்ட நில வகைப்பாடு தொடர்பான ஆதார ஆவணங்களை சிபிசிஐடியிடம் சமர்ப்பித்தனர்.

கடந்த காலகட்டங்களில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் சாட்சி கையெழுத்திட்ட நபர்கள் சிலரை, நேரில் ஆஜராக சிபிசிஐடி தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று 4 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலம் தொடர்பாக பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அங்கு பல்வேறு ஆக்கிரமிப்புக் கடைகள் இயங்கி வந்துள்ளன.

இந்த கடைகளுக்கு எந்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து, விளக்கம் கேட்டு மின்வாரியத்திற்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதையடுத்து கடைகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது மற்றும் மின் இணைப்பு மீண்டும் துண்டிக்கப்பட்டது குறித்து பழநி மின்வாரியம் சார்பில் உரிய ஆவணங்கள், விளக்க கடிதங்கள், சிபிசிஐடி வசம் தரப்பட்டன. இதனை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் மின்வாரிய அதிகாரிகளுடன் ஆவணங்கள் அடிப்படையில் ஆய்வு செய்து விசாரித்தனர்.

Tags : CBCID ,Palani ,Dindigul ,Dindigul district ,Palani land registry ,
× RELATED 10 இடங்களில் நேற்று வெயில் சதம்...