×

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் பக்தர் மூச்சுத்திணறி பரிதாப பலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் தரிசனத்தின்போது ஆந்திர மாநில பக்தர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பின்புறம் உள்ள மலையை சிவனாக வணங்கி 14 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கிரிவலம் வந்து வழிபடுகின்றனர்,

அப்போது, கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோயில்கள் மற்றும் அடி அண்ணாமலை கோயில், இடுக்கு பிள்ளையார் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி பகுதியை சேர்ந்த மணிகுமார்(36), தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கிரிவலம் மேற்கொண்டார்.

அப்போது, குபேரலிங்கம் அருகே உள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் நள்ளிரவில் தரிசனம் செய்ய சென்றனர். அப்போது, உடல் பருமன் காரணமாக கோயிலின் இடுக்கு பகுதியில் சிக்கி வெளியே வர முடியாமல் மணிக்குமார் அவதிப்பட்டார். மூச்சுத் திணறல் ஏற்பட்டு தவித்தவரை, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் இடுக்கு பகுதியில் இருந்து வெளியே மீட்டனர். பின்னர், அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மணிகுமாரை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து இடுக்கு பிள்ளையார் கோயில் தரிசனத்தின்போது பக்தர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

* இரவில் கண்காணிப்பு பணியாளர்கள் வேண்டும்
கடந்த சில ஆண்டுகளாக ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோயிலை ‘‘மோட்ச துவாரம்’’ என்று ஆந்திரா மாநில ஆன்மிக சொற்பொழிவாளர் தெரிவித்ததால் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். உடல் பருமன் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்னை உள்ளவர்கள் கோயிலுக்கு உள்ளே சென்று தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும். நள்ளிரவு நேரங்களில் கோயில் திறந்திருப்பதால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கண்காணிப்பு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Idukku Pillayar temple ,Giriwala path ,Tiruvannamalai ,Andhra Pradesh ,Annamalaiyar temple ,Shiva ,
× RELATED 10 இடங்களில் நேற்று வெயில் சதம்...