×

இலங்கை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக் ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 9 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.2 கோடி அளவிற்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 22ம் தேதி கடலுக்குச் சென்ற அந்தோணி பிரசாத் என்பவரின் விசைப்படகை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

படகில் இருந்த மீனவர்கள் பிரவீன், அருள் லொயோலா, சபரி வினோத், கீர்த்திசன், செந்தில், கயாஸ், மாலிக் தினார் உள்ளிட்ட 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை ஆக. 6ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்கள் கைதை கண்டித்தும், படகையும், மீனவர்களையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் கரை நிறுத்தம் செய்யப்பட்டன. சிறிய விசைப்படகுகள் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றன. வேலைநிறுத்தத்தால் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

Tags : Rameshwaram ,RAMESWARAM ,SRI LANKAN NAVY ,Rameshwaram Fishing Port ,
× RELATED 10 இடங்களில் நேற்று வெயில் சதம்...