×

17 மாணவிகளின் போட்டோக்களை ஆபாச இணையதளத்தில் பகிர்ந்த மாணவர் கைது

 

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 17 மாணவிகளின் போட்டோக்களை மார்பிங் முறையில் ஆபாச போட்டோக்களாக மாற்றி ஆபாச இணையதளத்தில் பகிர்ந்த மாணவரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சில மாணவிகளின் புகைப்படங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆபாச இணையதளத்தில் வெளியாகின. இதுகுறித்து அறிந்த மாணவிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 17 மாணவிகளின் போட்டோக்கள் ஆபாச இணையதளத்தில் வெளியானது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மாணவிகள் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதில் மாணவிகளின் போட்டோக்களை ஆபாச இணையதளத்தில் பகிர்ந்தது அதே கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் வயநாட்டைச் சேர்ந்த ஏபல் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர் சமூக வலைதளத்தில் இருந்து மாணவிகளின் போட்டோக்களை எடுத்து அதை மார்பிங் முறையில் ஆபாச போட்டோக்களாக மாற்றி இணையதளத்தில் பகிர்ந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணைக்குப் பின் ஏபலை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே ஏபல் மீது போலீசார் சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ததால் தான் அவருக்கு ஜாமீன் கிடைத்தது என்று கூறி நேற்று இரவு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஒவ்வொரு மாணவியின் புகாரிலும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvananthapuram ,Thiruvananthapuram Government Medical College ,
× RELATED டெல்லியில் உள்ள காந்தியடிகள்...