×

உலகக்கோப்பையுடன் மாட்ரிட் நகரில் பிரமாண்ட ஊர்வலம்; ஸ்பெயின் அணிக்கு 20 லட்சம் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு: அரச குடும்பம், பிரதமர் வாழ்த்து

மாட்ரிட்: உலகக்கோப்பையுடன் மாட்ரிட் திரும்பிய ஸ்பெயின் அணிக்கு 20 லட்சம் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வீரர்களுக்கு அரசர் குடும்பம் மற்றும் நாட்டின் பிரதமர் ஆகிய வாழ்த்து தெரிவித்தனர்.  நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-அர்ஜென்டினா அணிகள் மோதின. அனல் பறந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் உலகக்கோப்பையை வென்றது.

கடந்த 2 ஆண்டுகளாக எந்த அணியாலும் வீழ்த்த முடியாத அணியாக உருமாறி உள்ள ஸ்பெயின் அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்ற அசத்தியது. இந்நிலையில் உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி நேற்று தாயகம் திரும்பியது. அமெரிக்காவில் இருந்து மாட்ரிட் பராகாஸ் விமான நிலையம் வந்த ஸ்பெயின் வீரர்களுக்கு அந்நாட்டு ரசிகர்கள், மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அரசர் ஆறாம் பெலிப்பே மற்றும் அரச குடும்பத்தினர் வீரர்களை நேரில் சந்தித்து பாராட்டினர். ‘‘இது ஒரு வீர காவிய வெற்றி.

உங்கள் திறமையையும், உறுதியையும் கண்டு ஒட்டுமொத்த ஸ்பெயினும் பெருமிதம் கொள்கிறது’’ என்று அரசர் புகழாரம் சூட்டினார். இதன்பின், மொன்க்லோவா அரண்மனையில் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வீரர்களை சந்தித்து வாழ்த்தினார். ‘‘உங்களை விளையாட்டுத் திறனுக்கும், உழைப்பிற்கும், வெற்றிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்’’ என்று தெரிவித்தார்.

அரசு மரியாதைகளுக்கு பிறகு, ஸ்பெயின் அணி வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் இருந்தவாறு தலைநகர் மாட்ரிட்டின் முக்கிய வீதிகளில் உலகக்கோப்பையுடன் வரலாறு காணாத வகையில் பிரமாண்ட வெற்றி ஊர்வலம் சென்றனர். சுமார் 18 லட்சம் முதல் 20 லட்சம் ரசிகர்கள் சிவப்பும் மஞ்சளுமான தேசிய கொடிகளை ஏந்தி, வீதிகளிலும், கட்டிடங்களின் பால்கனிகளிலும் திரண்டு நின்று வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கேப்டன் ரோட்ரி, இளம் நட்சத்திரம் லாமின் யாமல், மார்க் குக்குரெல்லா உள்ளிட்ட வீரர்கள் உலகக்கோப்பையை கையில் ஏந்தி, நாம் சாம்பியன்கள் என்ற ஆடைகளை அணிந்து ரசிகர்களுடன் பாடி நடனமாடினர். பேரணியின் இறுதியில் புகழ்பெற்ற சிபெலெஸ் சதுக்கத்தை அடைந்தபோது, அங்கு லட்சக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

அங்கு முன்னணி இசைக்கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டங்கள் களைகட்டின. 2023ம் ஆண்டு நடந்த ஸ்பெயின் பெண்கள் அணி உலகக்கோப்பை வென்ற நிலையில், தற்போது ஆண்கள் அணியும் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக்கோப்பை இரண்டையும் ஒரே நேரத்தில் கைவசம் வைத்து உள்ள முதல் நாடு என்ற வரலாற்றுச் சாதனையை ஸ்பெயின் படைத்து உள்ளது.

* ஸ்பெயின், மொராக்கோ, போர்ச்சுக்கலில் அடுத்த உலகக்கோப்பை
24வது உலகக்கோப்பை கால்பந்த் தொடர் 2030ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி முதல் ஜூலை 21ம் தேதி வரை ஸ்பெயின், மொராக்கோ, போர்ச்சுக்கலில் நடைபெற உள்ளது. 1930ம் ஆண்டு உலகக்கோப்பை உருகுவேயில் அறிமுகம் செய்யப்பட்டது.

100வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, 1930ம் ஆண்டு இறுதிப்போட்டி நடைபெற்ற உருகுவேயின் மான்டிவீடியோவில் உள்ள எஸ்டாடியோ சென்டனா ரியோ மைதானம், அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் உள்ள எஸ்டாடியோ மானுமென்டல், பராகுவேயின் அசுன்சியோனில் உள்ள எஸ்டாடியோ ஒஸ்வால்டோ டொமிங்கஸ் டிப் ஆகிய மைதானங்களில் தலா ஒரு ஆட்டமும் மற்றும் சிறப்பு கொண்டாட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட கண்டங்களில் போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
மொராக்கோ, பராகுவே, போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் முதல் தடவையாகவும், உருகுவே (1930க்கு பிறகு), அர்ஜென்டினா (1978க்கு பிறகு), ஸ்பெயின் (1982க்கு பிறகு) ஆகிய நாடுகளில் 2வது முறையாகவும் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது.

Tags : Madrid ,World Cup ,Spain ,Argentina ,
× RELATED ஜூனில் சிறந்த வீரர் நாதன்ஸ்மித்: ஐசிசி அறிவிப்பு