×

இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது; மேகக் கூட்டத்தில் மிதப்பது போல் உணர்கிறேன்: ஸ்பெயின் கேப்டன் ரோட்ரி உற்சாகம்

நியூஜெர்சி: பிபா உலக கோப்பை பைனலில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றிக்கு பின் அந்த அணியின் கேப்டனும், தொடரின் சிறந்த வீரருக்கான ‘தங்கப் பந்து’ விருது பெற்றவருமான ரோட்ரி உணர்ச்சி பொங்க கூறியதாவது: நான் இப்போது ஒரு மேகக் கூட்டத்தில் மிதப்பது போல் உணர்கிறேன், இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நாம் உலகக் கோப்பை வெற்றியாளர்கள் என்று சத்தமாக சொல்வதே நம்ப முடியாததாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை இதுவே வரலாற்றின் மிகவும் கடினமான உலகக் கோப்பை தொடராகும் என்றார்.

18 மாதங்களுக்கு முன் சந்தித்த மிகக் கடுமையான காயத்தில் இருந்து மீண்டு வந்து இந்த சாதனையை படைத்தது பற்றி கூறுகையில், ”நான் கடந்து வந்த பாதையை உணர்ந்தவர்களுக்கே இந்த உணர்வு புரியும். உங்களது கேரியர் கீழே சரிந்தாலும், கடின உழைப்பால் மீண்டும் உச்சத்திற்கு வர முடியும் என்பதற்கு என் கதையை இளைஞர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் வீழ்த்திய அர்ஜென்டினா அணி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர்களிடம் கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரரான லியோனல் மெஸ்சி உள்ளார். அத்தகைய பலமான அணியை வெல்வது எளிதல்ல. போட்டிக்கு முன்பு நான் வீரர்களிடம் சொன்னேன்,நாம் வெற்றிக்காக மட்டுமே ஆட வேண்டும், அவர்களின் கண்களை நேருக்கு நேர் பார்த்து இந்த கோப்பை நமக்குத்தான் வேண்டும் என்பதை காட்ட வேண்டும் என்றேன். அதன் பலனை வாழ்க்கை நமக்கு உலகக் கோப்பையாக தந்துள்ளது,என்றார்.

முதன்முறையாக தங்க மோதிரம்;
பிபா உலகக் கோப்பை கால்பந்து 96 ஆண்டுகள் வரலாற்றில் முதன்முறையாக, சாம்பியன் பட்டம் வெல்லும் அணி வீரர்களுக்கு பிரத்தியேக சாம்பியன்ஷிப் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன. இந்த மோதிரத்தின் ஒரு பக்கத்தில் உலகக் கோப்பை டிராபியின் உருவமும், மறுபக்கம் வெற்றி பெற்ற அணி அடையாளமும் பொறிக்கப்பட்டிருந்தது. தொடரைக் குறிக்கும் வகையில் மொத்தம் 2,026 மோதிரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 30 மோதிரங்கள் சாம்பியன் அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்குவழங்கப்பட்டது. மீதமுள்ள 1,996 மோதிரங்கள் உலகளவில் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு நினைவுப் பொருட்களாக விற்பனை செய்யப்படும்.

ரசிகர்களுக்கு வெற்றி சமர்ப்பணம்;
ஸ்பெயின் பயிற்சியாளர் லூயிஸ் டிலா கூறுகையில், இந்த அணி ஸ்பெயின் கால்பந்து வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை எழுதியுள்ளது. தற்போது உலகிலேயே மிகச்சிறந்த வீரர்கள் கொண்ட அணி ஸ்பெயின் தான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. தொடரின் முதல் போட்டியில் இருந்து இறுதிப்போட்டி வரை அவர்கள் ஆடிய விதம் அற்புதம்.இந்த உலகக் கோப்பை வெற்றி தற்செயலாக நடந்தது அல்ல. வீரர்களின் பல மாத கால உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்திற்கு கிடைத்த தகுதியான பரிசு இது. யமால் ஒரு அசாத்தியமான திறமைசாலி. அவர் ஸ்பெயின் கால்பந்தின் எதிர்காலம். இந்த கோப்பை ஒட்டுமொத்த ஸ்பெயின் மக்களுக்கானது. எங்களை நம்பி, எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம்” என்றார்.

பைனலை ரசித்த 200 கோடி பேர்;
நியூஜெர்சி மைதானத்தில் போட்டியை 80ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர். இவை தவிர உலகம் முழுவதும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் திரைகளில் சுமார் 2 பில்லியன் (200 கோடி) ரசிகர்களும் கண்டு களித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிபா தலைவர் ஜியானி இன்ஃபேன்டினோ, மற்றும் நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பல உலகளாவிய பிரபலங்கள் போட்டியை மைதானத்தில் நேரடியாகக் கண்டுகளித்தனர்.

இறைவனுக்கு நன்றி!
வெற்றிக்கான ஒற்றை கோலை அடித்த ஸ்பெயின் அணியின் ஆட்டநாயகன் பெர்ரான் டோரஸ் கூறியதாவது: இந்தக் கோலை அடித்தது எனக்கு ஒரு பெரிய நிம்மதியை தந்துள்ளது. இந்தத் தொடர் முழுவதும் நான் பல விமர்சனங்களைச் சந்தித்தேன், ஆனால் விடாமுயற்சியை மட்டும் கைவிடவில்லை. கடினமாக உழைப்பவர்களுக்கே தகுதியானவை கிடைக்கும் என்பதற்கு இந்த வெற்றி ஒரு உதாரணம்.இதற்காக நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். இறுதிப் போட்டிகள் எப்போதுமே கடினமானவை. அதிலும் குறிப்பாக, எதிரணியில் மெஸ்சி போன்ற ஒரு ஜாம்பவான் இருக்கும்போது, மனதில் ஒருவித பயமும் பதற்றமும் ஏற்படுவது சகஜம். ஆனால், அந்தப் பதற்றத்தையும் தாண்டி நாங்கள் எங்கள் மீதும், எங்கள் சொந்த கால்பந்து பாணியின் மீதும் முழு நம்பிக்கை வைத்தோம். அதை மைதானத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளோம், என்றார்.

2வது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே;
பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே மொத்தம் 10 கோல்கள் அடித்து, தொடரின் அதிக கோல் அடித்த வீரருக்கான ‘கோல்டன் பூட்’ விருதை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.கத்தாரில் நடைபெற்ற 2022 உலகக் கோப்பைத் தொடரைத் தொடர்ந்து (8 கோல்), தற்போது தொடர்ச்சியாக 2வது முறையாக உலகக் கோப்பையில் கோல்டன் பூட் விருதை வென்ற முதல் வீரர் என்ற உலக சாதனையை எம்பாப்பே படைத்துள்ளார். 1970 உலகக் கோப்பையில் ஜெர்மனியின் கெர்ட் முல்லருக்குப் பிறகு, ஒரே உலகக் கோப்பைத் தொடரில் 10 கோல்கள் அடித்த முதல் வீரர் எம்பாப்பே ஆவார்.ஒட்டுமொத்தமாக 22 கோல்களுடன், அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சியை (21 கோல்) முந்தி, உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் எம்பாப்பே முதலிடம் பிடித்துள்ளார்.

அர்ஜென்டினா மனமார்ந்த நன்றி;
​​தோல்வி குறித்து அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி கூறியதாவது: இன்று எங்களுக்கு மிகவும் கடினமான நாளாக அமைந்துவிட்டது. உலகக் கோப்பை மேடையில் யாரும் எதையும் எளிதாகக் கொடுத்துவிட மாட்டார்கள். மைதானத்தில் நிலைமை எங்களுக்குச் சாதகமாக இல்லாதபோதும், நாங்கள் இறுதிவரை போராடினோம். நாங்கள் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்க விரும்பினோம். அது முடியாமல் போனது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இருந்தாலும், தொடர் முழுவதும் எங்களுக்கு ஆதரவளித்த அர்ஜென்டினா மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எனது வயதைக் கணக்கில் கொண்டு பார்த்தால், இதுவே எனது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கக் கூடும். நான் இப்போது எனது கிளப் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளேன்” என்று தெரிவித்தார்

Tags : Spain ,Rodri ,New Jersey ,FIFA World Cup ,Argentina ,
× RELATED ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர...