- சோனம் வாங்சுக்
- தில்லி உயர் நீதிமன்றம்
- புது தில்லி
- NEET
- சஃப்தர்ஜங் மருத்துவமனை
- சஃப்தர்ஜங் மருத்துவமனை...
புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் விஞ்ஞானியும் சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுகை, சஃப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாறுவதற்குத் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.
சஃப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து அவரை இடமாற்றம் செய்ய மறுத்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது. இந்த விசாரணையின் போது, வாங்சுக்கை மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றுவதில் தங்களுக்கு “எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று ஒன்றிய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அதேவேளையில், அவர் தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டது. சோனம் வாங்சுக்கை மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றுவதில் ஒன்றியஅரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.
இருப்பினும், வாங்சுக் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும், மேதாந்தா மருத்துவமனை மருத்துவர்களின் அறிவுறுத்தலின்றி அவரை மருத்துவமனையிலிருந்து விடுவிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். சஃப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து வாங்சுக்கின் அனைத்து மருத்துவ ஆவணங்களுடனும் அவரை இடமாற்றம் செய்யுமாறு பரிந்துரைத்த நீதிபதிகள் அமர்வு, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இது குறித்த அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டத்தை ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ தீவிரப்படுத்தியதோடு, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் மீண்டும் வலியுறுத்திய நிலையில், வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் தொடர்ந்து 24-வது நாளை எட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
