×

அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை.! பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் ஆர். சக்திவேல் அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் அரசுப் பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ (ITI) மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க படுகிறது. ஆனால், அரசு சட்டக் கல்லூரில் படிக்கும் மாணவர்களுக்கு இது போன்ற வசதி வழங்கப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

பெரும்பாலான மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலிருந்து வருவதால், கலை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இணையாக சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் இந்தச் சலுகையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தற்போது மகளிர் இலவசமாக அரசு நகரப்பேருந்துகளில் பயணிக்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. இந்த சூழலில் அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை ஏன் வழங்குவதில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த மனு குறித்து போக்குவரத்து துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

 

Tags : Court ,Madurai ,High Court ,Tamil Nadu State Transport Department ,
× RELATED மாமல்லபுரத்தில் 29ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம்