லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஹசரத்கஞ்ச் பகுதியில் உள்ள 12 மாடி அரசு கட்டிடமான ஜவஹர் பவன்-இல் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அரசு அலுவலக ஊழியர்கள் இன்றைய பணிகளை துவங்கிய சில நிமிடங்களில் காலை சுமார் 10 மணியளவில் கட்டிடத்தின் மேல் தளங்களில் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஜவஹர் பவன் கட்டிடத்தின் 4-வது மாடியில் உள்ள உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகம் மற்றும் கேன்டீன் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்தை தொடர்ந்து அலுவலக ஊழியர்களும், பொதுமக்களும் ஜவஹர் பவன் கட்டிடத்தை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பல தீயணைப்பு வாகனங்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டன. விரைந்து செயல்பட்டு, கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் தீயணைப்பு துறையினர். அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் எந்தவித உயிர்ச்சேதமோ அல்லது யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை. லக்னோ மாநகராட்சி மேயர் சுஷ்மா கர்க்வால் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்துள்ளார்.
லக்னோவின் தலைமை தீயணைப்பு அதிகாரி அங்குஷ் மிட்டல் பேசுகையில், தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், கட்டிடத்திற்குள் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
