×

ஐஸ் கம்பெனியில் இருந்து அமோனியா கலந்த நீர் கால்வாயில் வெளியேற்றம்: காசிமேட்டில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: காசிமேட்டில் ஒரு ஐஸ் யூனிட் உபயோகப்படுத்திய அமோனியா வாய்வு கலந்த நீரை ஊழியர்கள் வெளியே கால்வாயில் ஊற்றியதால் சுற்றுவட்டார பகுதிகளில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதாக கூறி பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து புகாரின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கால்வாயில் தண்ணீரை ஊற்றி அமோனியா வாயுவை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சென்னை காசிமேடு மீன் மார்க்கெட் பகுதியில் தனியார் ஐஸ் பேக்டரி ஒன்று இயங்கி வருகிறது. ஐஸ் கம்பெனியில் பயன்படுத்திய அமோனியா கலந்த நீர் பக்கத்தில் உள்ள கால்வாயில் ஊற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் அமோனியா வாய்வு கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதை தொடர்ந்து மீனவர்கள் அச்சமடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உதவி ஆணையர் பிரேமானந்தா மற்றும் மீன்பிடி துறைமுகம் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். தொடர்ந்து, அவர்கள் கொடுத்த தகவலின்படி, மீன்வளத் துறை உதவி இயக்குனர் மற்றும் ராயபுரம் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நிலை அலுவலர் பொறுப்பு பூஷன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை கால்வாயில் அடித்து அமோனியாவை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து, மீனவர்கள் கூறியதாவது:
தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில் இங்கு இயங்கும் ஐஸ் பேக்டரிகளில் பயன்படுத்தப்படும் அமோனியா எந்த அளவு வைத்துள்ளார்கள் என்று கணக்கெடுக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு பெரியபாளையத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, காசிமேட்டில் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக உடனடியாக தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் சண்முகசுந்தரம், உதவி ஆய்வாளர் ஆதிபுரீஸ்வரர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தமிழக அரசு சார்பாக மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில் துறை சார்ந்த சென்னை மீன்பிடி துறைமுக மேலாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்யக்கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kasimede ,Thandaiyarpet ,
× RELATED மாமல்லபுரத்தில் 29ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம்