புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ. பிரையன் பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளார். அதில், “நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான அரசு பணிகள் பட்டியலில் தொகுதி மறுவரையறை மசோதா இடம்பெறவில்லை. ஆனால், முக்கியமான சட்டங்களை கையாள்வதில் ஒன்றிய அரசின் சந்கேத்துக்குரிய செயல்பாட்டு வரலாறு காரணமாக எதிர்க்கட்சிகள் அச்சத்தில் உள்ளன.
தொகுதி மறுவரையறையில் ரகசியமான உத்திகளை அரசு கையாளக்கூடாது” என வலியுறுத்தி உள்ளார். மேலும் அந்த கடிதத்தில், “மழைக்கால கூட்டத்தொடரில் பரிசீலிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட உள்ள, வௌிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை(எப்சிஆர்ஏ) திருத்த மசோதா 2026 சட்டம் நாட்டின் ஏழ்மையான மற்றும் விளிம்புநிலை சமூகங்களிடையே பணியாற்றும் அமைப்புகளை பலவீனப்படுத்தும்.
இதில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள், கிறிஸ்தவ சமூகத்தால் நடத்தப்படும் ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்களை பாதிக்கும்” என சுட்டிக்காட்டி உள்ள டெரிக் ஓ.பிரையன், “இந்த இரண்டு மசோதாக்கும் ஜனநாயகத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பவை என்பதால், ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்காமல் அனைத்து அரசியல் கட்சிகளையும் கூட்டி விரிவான ஆலோசனை நடத்த வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
