×

காஷ்மீரில் பலத்த மழை நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 12 பேர் பலியாகினர்.மேலும் சிலர் மாயமாகினர். ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லை மாவட்டங்களான பூஞ்ச், ரஜோரி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையினால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. பலத்த மழையினால் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுரன் கோட் தாலுக்காவில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. சுரன் கோட் அருகே உள்ள லோயர் முர்ரா என்ற கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு இடிந்து விழுந்தது.

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மண்ணில் புதையுண்டனர். இதில் 2 வயது குழந்தை உட்பட 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதி உள்ளவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. சாங்லா என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. நூனாபந்தி கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 28 வயது பெண் பலியானார். அவரது கணவனும் 3 குழந்தைகளும் மீட்கப்பட்டனர்.

அதே போல் சாங்லானி சுரன் கோட் பகுதியில் வீடு இடிந்து ஒரு வாலிபர் இறந்தார்.பூஞ்ச் மாவட்டத்தில் பல வீடுகள் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். இன்னொருவர் பலத்த காயமடைந்தார். ரஜோரி மாவட்டத்தில் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டு ஒரு பெண் பலியானார். இதற்கிடையே மாநில அந்தஸ்து கோரி போராட்டத்தில் ஈடுபடுவதற்காக முதல்வர் உமர் அப்துல்லா டெல்லி சென்றிருந்தார்.மழையால் பலத்த பாதிப்பு ஏற்பட்டதை கேள்விப்பட்டதும் அவர் டெல்லி பயணத்தை ரத்து செய்து விட்டு ஜம்மு திரும்பினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kashmir ,Jammu ,Poonch ,Rajouri ,Jammu and Kashmir ,
× RELATED இந்தியாவில் முதல் டெங்கு தடுப்பூசி...