மதுரை: மதுரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாமை தொடங்கி வைக்க சென்ற தவெக எம்எல்ஏ காரை, முற்றுகையிட்டு கட்சி பதவி கேட்ட தவெகவினரால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளாங்குடி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாம் நேற்று நடந்தது. தவெக மதுரை தெற்கு மாவட்டச் செயலாளரும், மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான தங்கபாண்டியன் தொடங்கி வைத்தார்.
இதற்காக விளாங்குடி பகுதிக்கு காரில் வந்த எம்எல்ஏ தங்கப்பாண்டியனை, தவெக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அவரிடம், ‘‘நாங்கள் கட்சியில் தொடர்ந்து கடுமையாக பணியாற்றி வர்றோம். ஆனால், எங்களுக்கு எந்த பதவியும் தர மாட்டேங்குறீங்க… மாற்றுக்கட்சியில இருந்து வந்தவங்களுக்கு பதவியை அள்ளி தர்றீங்க… விஜய் நற்பணி மன்றத்துல இருந்து நாங்க கடுமையாக உழைக்கிறோம்… எங்களுக்கு பதவி தர வேண்டாமா…’’ என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை சில தவெக தொண்டர்கள் ‘வழக்கம்போல’ செல்போனில் வீடியோ எடுத்தனர்.
இதனால் டென்ஷன் ஆன எம்எல்ஏ தங்கப்பாண்டியன், ‘‘வீடியோ எல்லாம் எடுக்காதீங்க… உடனே போனை கட் பண்ணுங்க… ஆமா காரை மறித்துத்தான் பதவியெல்லாம் கேட்பீங்களா? எதுவானாலும் மனுவாக எழுதி கொடுங்க. முயற்சி பண்ணலாம். இப்ப வழியை விடுங்க…’’ என்றார். அதற்கு தொண்டர்கள், ‘‘மாவட்டச் செயலாளர் என்பதால்தான் நேரில் பேசுகிறோம்’’ என்று தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் எம்எல்ஏ தங்கபாண்டியன், அங்கிருந்து காரில் வேகமாக புறப்பட்டு சென்றார்.
